எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதினார் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர - News View

Breaking

Friday, September 10, 2021

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதினார் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர

(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புக்களைக் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்க அறிந்திருந்தாரா? என்பது குறித்தும் ஐக்கிய மக்கள் சக்தியினால் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் எவையேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளிக்க வேண்டும் என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகரவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புக்களைக் கூட்டிணைப்பதற்கான சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பின் பின்னர் அதற்கு எதிராக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம், பூகோள இலங்கையர் பேரவை, பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களால் அரசியலமைப்பின் 121 ஆம் பிரிவிற்கு அமைவாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்து நீங்கள் அறிந்திருந்தீர்களா என்று எமக்குத் தெரியவில்லை.

இருப்பினும் அந்த சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்புடனுமே நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் விடத்தை நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.

மேற்படி சட்டமூலத்தின் ஊடாகக் கூட்டிணைப்படும் மனித உரிமை அமைப்புக்கள் அரசுடன் தொடர்புடைய மற்றும் தொடர்புபடாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான அதிகாரங்களைப் பெறுவதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குச் சமாந்தரமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அதிகாரத்தையும் பெறும்.

எனவே மனித உரிமை அமைப்புக்களுக்கு அத்தகைய அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க முயற்சித்துள்ளமை தெளிவாகப் புலனாகின்றது. அது நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு திஸ்ஸ அத்தநாயக்க அறிந்தோ அல்லது அறியாமலோ பங்களிப்பை வழங்கியிருக்கின்றார் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பிரிவினைவாத, இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கெதிராக அழுத்தம் பிரயோகிப்பதும் அதனை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதுமே நாட்டிற்குள் இருந்து செயற்படுகின்ற இவ்வாறான குழுக்களின் பிரதான நோக்கமாகும்.

எமது நாட்டிற்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சதித்திட்டம் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதனாலேயே நாம் அதற்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தோம்.

அதுமாத்திரமன்றி அந்தச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் நிலையியற் கட்டளைகள் மீறப்பட்டுள்ளமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை வர்த்தமானிப்படுத்தி, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கு முன்னர், சட்டமூலம் அரசியலமைப்பை மீறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமா அதிபரிடம் அனுமதி பெற்றப்பட வேண்டும்.

ஆனால் இச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் சட்டமா அதிபரிடம் அனுமதி பெறப்படாமை மிகவும் தவறான முன்னுதாரணத்தை வழங்குகின்றதல்லவா? எனவே இது குறித்து விசேடமாக ஆராயும் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் உங்களுக்கும் சபாநாயகருக்கும் உள்ளது.

ஏற்கவே 2013 ஆம் ஆண்டில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எச்.பாரூக்கின் ஊடாக இந்தச் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் தற்போது திஸ்ஸ அத்தநாயக்கவைப் பயன்படுத்தி அச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அவர் அறிந்திருந்தாரா என்று தெரியவில்லை.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கொள்கை ரீதியிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. எனவே இது குறித்து பொதுமக்களுக்கு உரியவாறு விளக்கமளிக்கும் அதேவேளை, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment