கொரோனா தொற்றால் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

கொரோனா தொற்றால் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

சுகயீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் கடந்த 8ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கற்பிட்டி பெரியகுடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான லாபிர் அலி எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட கற்பிட்டி சமுர்த்தி வங்கியில் காசாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி காலை சுகயீனம் காரணமாக கற்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அன்றையதினம் மாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த ஜனாஸா மீது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் தள வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த கற்பிட்டி ஏத்தாளை எரும்புக்கூடல் பகுதியியைச் சேர்ந்த கே.எஸ்.ஹைருன் நிஸா (56) எனும் ஐந்து பிள்ளைகளின் தாயார் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஏத்தாளை எரும்புக்கூடல் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய தாய் ஆகிய இருவரின் ஜனாஸாக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை புத்தளத்திலிருந்து குருநாகலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மாலை நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment