(இராஜதுரை ஹஷான்)
எம்.சி.சி. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே கெரவலபிடிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எம்.சி.சி ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை வெவ்வேறான பெயர்களில் செயற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டவல்லுணர்களுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துள்ளோம் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்.சி.சி. ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து அதனூடாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது அந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை பெயர் மாற்றி செயற்படுத்த முயற்சிக்கிறது. கெரவலபிடிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளும் இதனடிப்படையில் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எம்.சி.சி. ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பிலான மீளாய்வு குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
தலைநகரில் உள்ள பெறுமதியான காணிகள் பிற நாடுகளுக்கு வழங்குவதற்கு செலண்டிவா நிறுவனத்தின் ஊடாக நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரச தலைவர்களும் நாட்டின் தேசிய வளங்களை இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏதாவதொரு வழியில் வழங்கியுள்ளார்கள்.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பிற நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவும் நாட்டின் தேசிய வளங்கள் கூறுபோட்டு ஒவ்வொரு தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாடு என்னவாகும் என்று சிந்திக்க தோன்றுகிறது.
இலங்கையர்கள் சொந்த நாட்டில் அகதிகளை போல் வாழும் நிலை ஏற்படுமா என்றும் கருத தோன்றுகிறது. தேசிய வளங்களை பாதுகாக்க முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுணர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment