ஆப்கானிஸ்தான் நகரான ஹரெத்தில் கடத்தல் காரர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் பொது சதுக்கம் ஒன்றில் தொங்கவிடப்பட்டதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மரண தண்டனை மற்றும் உடல் உறுப்புகள் துண்டிக்கப்படும் கடுமையான தண்டனைகள் அமுல்படுத்தப்படவிருப்பதாக பிரபல தலிபான் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்து ஒரு நாளைக்கு பின்னரே இந்த கொடிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வர்த்தகர் ஒருவர் மற்றும் அவரது மகனை கடத்தியதாக குற்றம் சாட்டப்படும் இந்த நபர்களுடனான துப்பாக்கிச் சண்டையிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நகரின் மத்தியில் கிரேன் ஒன்றில் இந்த உடல்கள் தொங்க விடப்பட்டதாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு உடல்கள் சதுக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு அதில் ஒன்று அங்கு தொங்க விடப்பட்டதோடு மற்றயவை வேறு சதுக்கங்களில் தொங்க விடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேறு கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலேயே உடல்கள் இவ்வாறு தொங்கவிடப்பட்டதாக ஹரெத் பிரதி ஆளுநர் மௌலவி ஷயீர் தெரிவித்துள்ளார்.
இதில் கடத்தப்பட்ட வர்த்தகர் மற்றும் அவரது மகன் இருவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இரத்தம் தோய்ந்த ஒரு உடல் கிரேனில் தொங்க விடப்பட்டிருப்பதும் மற்றைய உடல்கள் பிக் அப் டிரக்கின் பின்புறமாக இருப்பதும் சமூக ஊடகத்தில் வெளியான படங்களில் தெரிகிறது.
இதில் கிரேனில் தொங்க விடப்பட்ட உடலின் நெஞ்சுப் பகுதியில், ‘கடத்தல் காரர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்கப்படும்’ என்று எழுதப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானை கைப்பற்றிய தலிபான்கள் தமது முந்தைய ஆட்சியில் இருந்தும் மிதவாத போக்குடன் ஆட்சி புரிவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
எனினும் நாடு முழுவதும் அவர்களால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன.
தலிபான்களின் சமயப் பொலிஸின் முன்னாள் தலைவரும் தற்போது சிறைச்சாலைகளுக்கு பொறுப்பானவருமான முல்லா நூருத்தீன் துராபி கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மரண தண்டனை மற்றும் உடல் உறுப்புகளை துண்டிக்கும் கடுமையான தண்டனைகள் பாதுகாப்புக்கு அவசியமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment