(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் பங்காளி கட்சிகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிப்பதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கெரவலபிட்டிய மின்நிலையம் தொடர்பில் ஆளும் தரப்பிற்குள் எழுந்துள்ள முரண்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கெரவலபிட்டிய மின் நிலையத்தின் பங்குகளை ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
அமைச்சரவையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது அதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். அதனை விடுத்து பங்காளி கட்சி உறுப்பினர்களை ஒன்றினைத்து இரகசியமான முறையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு பின்னர், ஊடகங்களில் நாங்கள் கெரவலபிட்டிய மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு' என்று குறிப்பிடுவது எந்தளவிற்கு நியாயமானது?
கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்கான தீர்வு காண்பதற்கு முறையான அணுகுமுறைகளை கையாள வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு கூட்டணியின் கொள்கைக்கு முரணாக செயற்படுவது அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். பங்காளி கட்சிகளின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானிக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment