(எம்.மனோசித்ரா)
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் அபாயம் மிக்க பக்றீரியா இனங்காணப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளது. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய உரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதியளித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரியில் அபாயம் மிக்க பக்றீரியா இனங்காணப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
முத்திரையிடப்படாத குறித்த மாதிரியில் இவ்வாறான அபாயம் மிக்க பற்றீரியா இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தவிர மருந்து மற்றும் உரம் போன்ற எந்தவொரு பொருளும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும்போது விலைமனு கோரலுக்கு முன்னர் மாதிரிகள் பெறப்படும் அதேவேளை, நாட்டுக்கு அவை கொண்டு வரப்பட்டதன் பின்னரும் எழுமாறாக மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.
எனவே நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியா அல்லது உயிரிகள் உள்ளடங்கிய உரம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment