நாட்டு மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம், வேறு எதற்காகவும் அரசாங்கம் பயன்படுத்தாது - அமைச்சர் மஹிந்தானந்த - News View

Breaking

Monday, September 6, 2021

நாட்டு மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம், வேறு எதற்காகவும் அரசாங்கம் பயன்படுத்தாது - அமைச்சர் மஹிந்தானந்த

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்களை பாதுகாக்கவே அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு எதற்காகவும் இந்த சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தாதென உறுதியாக கூறுகிறோம். அத்துடன் சர்வதேச ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை போன்று நாட்டில் எவ்வித உணவுத் தட்டுப்பாடும் இல்லை. மாறாக இங்கு உணவு மாபியாவே உள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (6) இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் பொதுமக்கள் தமக்கு அவசரகாலச் சட்டம் அவசியமில்லையென தீர்மானித்தால் பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றாதிருக்க முடியும். நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோரை பாதுகாக்கவே ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தியிருந்தார்.

நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. நாட்டு மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதிக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த முடியும். ஆனால், இங்கு உணவு மாபியா ஒன்று உள்ளது. உணவு மாபியாவை கட்டுப்படுத்ததான் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.

மேலும் ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டு மக்களுக்குத் தேவையான உணவை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதிக்கு பொறுப்புள்ளது. அத்துடன் நாட்டை இராணுவ மயமாக்கும் நோக்கில்தான் அவசரகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

எதிர்க்கட்சிகள் நடத்திய எந்த போராட்டத்துக்கும் ஒரு தண்ணீர் பீச்சு இயந்திரத்தை கூட ஜனாதிபதி பயன்படுத்தியிருக்கவில்லை. ஆகவே, நாட்டு மக்களின் நலனை முதல் காரணியாக கொண்டே அவசகாலச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment