(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வர்ண வலயங்களாக வகைப்படுத்தி பேருந்து போக்கு வரத்து சேவையினை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் போக்கு வரத்து அமைச்சிடம் கையளித்துள்ளனர்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன குறிப்பிட்டதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்று தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்கள் சிவப்பு நிறத்திலும், குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மாகாணங்கள் மஞ்சள் நிறத்திலும், கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் இல்லாத மாகாணங்கள் பச்சை நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களில் பேருந்துகளின் ஆசன அடிப்படையில் 50 சதவீதமானோருக்கும், மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களில் பேருந்துகளின் ஆசன அடிப்படையில் 100 சதவீதமானோரும் பயணிக்க முடியும்.
அத்துடன் பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களில் பேருந்து சேவையில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகள் பயணம் செய்வதற்கான நடைமுறை காரணிகளை உள்ளடக்கிய வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்கு வரத்து சேவைக்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்த முடியாது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment