நான்கு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்தாட்டத் தொடர் - News View

Breaking

Tuesday, September 7, 2021

நான்கு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்தாட்டத் தொடர்

(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

நான்கு நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்தாட்டத் தொடரொன்றை நடாத்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபோன்ற போட்டித் தொடரொன்று இலங்கையில் நடத்தப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இப்போட்டித் தொடரில் இலங்கை, மாலைத்தீவு, பங்களாதேஷ், சீசெல்ஸ் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இப்போட்டித் தொடரில் சம்பியனாகும் அணிக்கு 5000 அமெரிக்க டொலர் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளதுடன், இப்போட்டித் தொடரில் பங்கேற்பதாக மூன்று வெளிநாடுகளும் உறுதியளித்துள்ளன.

சகல போட்டிகளும் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடத்தப்படவுள்ளதுடன், நவம்பர் மாதத்தின் 8 ஆம், 11 ஆம், 14ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, மாலைத்தீவில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டத் தொடர் நிறைவடைந்து மூன்று வார காலத்துக்கு பின்னர் இப்போட்டித் தொடர் ஆரம்பமாகும்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைவரும் 'பயோ பபிள்' முறையில் ஈடுபடுத்தப்பட்டு இப்போட்டத் தொடர் நடத்தப்படவுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்தாட்ட தரவரிசையில் மாலைத்தீவு 158 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 188 ஆவது இடத்திலும், சீசெல்ஸ் 199 ஆவது இடத்திலும், இலங்கை 205 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment