தனதுயிரை பணயமாக வைத்து கொவிட்க்கு எதிராக போராடும் வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார ஊழியர்கள், முப்படை மற்றும் பொலீசாருக்கு நாம் நன்றிக் கடன் செலுத்துவோம் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் - News View

Breaking

Tuesday, September 7, 2021

தனதுயிரை பணயமாக வைத்து கொவிட்க்கு எதிராக போராடும் வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார ஊழியர்கள், முப்படை மற்றும் பொலீசாருக்கு நாம் நன்றிக் கடன் செலுத்துவோம் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார்

கொரோனா என்கின்ற கொடிய தொற்று நோயில் இருந்து நாட்டில் வாழும் அனைத்து மக்களின் உயிரையும் பாதுகாக்க தமது உயிரை பணயம் வைத்து குடும்பத்தவர்களை விட்டும் பிரிந்து இரவு பகல் என்று பார்க்காமல் கொரோனாவுக்கு எதிராக போராடுகின்ற வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், முப்படையினர்,பொலிஸாருக்கு நாம் என்றும் நன்றி கடன்பட்டவர்களாக உள்ளோம். எனவே நாம் அனைவரும் இன மத வேறுபாடுகளின்றி அவரவர் மார்க்க அடிப்படையில் அவர்களுக்காக பிராத்தனையில் ஈடுபட வேண்டும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.

கொரோனாவினால் நளாந்தம் 150 க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் 3000 க்கும் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகியும் வருகின்ற நிலையில் 06/09/2021 ம் திகதி வரை ஓட்டமாவாடி மஜ்மா நகரில் நேற்று 21 முஸ்லீம் ஜனாஸாக்களும், 03 மாற்றுமத சகோதரர்களின் மரணங்களுடன் மொத்தமாக 24 மரணங்கள் அடக்கம் செய்யப்பட்டதுடன் இதுவரைக்கும் மொத்தமாக 2613 கோவிட் மரணங்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதோடு நாட்டில் மொத்தமாக 10320 பேர் கோவிட் மூலம் மரணமடைந்துள்ளனர். 

இந்த கோவிட்19 தொற்றில் இருந்து நாம் அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியதுடன் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும், இந்த கொரோனா இன, மத, பேதம் பாராமல் அனைவரின் உயிரையும் பறித்து வருகின்றது.

தற்போது நாட்டின் பெரும்பாலான வைத்தியசாலைகள் கொவிட்19 தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன. கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பின் காரணமாக சிகிச்சை செய்வதற்கு வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் தட்டு தடுமாறி வருகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் தமது உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றனர். இவர்களது சேவைகளை எம்மால் குறைத்து மதிப்பிட முடியாது. இரவு,பகல் என்று பராமல் போராடி வரும் இவர்கள் படும் துன்பம், துயரம் சாதாரணமான விடயமல்ல. 

இதுவரைக்கும் வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலீசார் சிலரும் சேவையில் இருக்கும்போது இந்த கொரோனாவினால் பீடிக்கப்பட்டு இறந்துள்ளனர். எனவே இவர்களது சேவைக்கு நாட்டு மக்கள் அனைவரும் எப்போதும் நன்றிக் கடன் பட்டவர்களாக உள்ளனர். 

எனவே இவர்களுக்காக நாம் தினமும் பிராத்தனைகள் செய்ய வேண்டும். அது எமது கடமையாகும். அவர்களுக்காக எம்மால் செய்ய முடியுமான நன்றிக் கடன் பிராத்தனையாகும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment