நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், சுவாச, இருதய நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் : செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று குறைவடையும் என எதிர்பார்க்கிறோம் - கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தௌபீக் - News View

Breaking

Friday, September 10, 2021

நீரிழிவு, உயர்குருதி அமுக்கம், சுவாச, இருதய நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் : செப்டம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று குறைவடையும் என எதிர்பார்க்கிறோம் - கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தௌபீக்

கொரோனா மூன்றாவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 42784 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு டெல்டா திரிபின் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆகவே தடுப்பூசிகளை நீங்கள் பெற்றுக் கொண்டாலும் இத்தாக்கங்களில் இருந்து பாதுகாக்க சில நாட்கள் செல்லும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 4 பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளில் கொரோனா வைரஸின் பிறழ்வு வகை டெல்டா வகை திரிவு பரவலாக அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆய்வு கூட அறிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. 

கொரோனா மூன்றாவது அலையில் மொத்தமாக 42784 நோயாளர்களும் 772 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் ஆகஸ்ட் மாத மூன்றாம் நான்காம் வாரங்களில் நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டிருந்தது. 

எனினும் செப்டம்பர் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து. அது எமக்கு ஆறுதலாக இருந்தாலும் இது மேலும் இவ்வாறு குறைவடைய செய்வது பொதுமக்களின் அன்றாட வாழக்கையிலும் இரண்டு தடுப்பூசிகளை பெறுவதிலும் ஏனைய தொற்றா நோய்களான நீரிழிவு நோய் உயர்குருதி அமுக்கம் ஏனைய சுவாச இருதய நோய்கள் இவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். 

இந்நோய்கள் இருப்பவர்களும் தடுப்பூசி முற்றாக பெறாதவர்களும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களுமே அதிகமாக மரணத்தை தழுவியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் எமக்கு போதுமான வகையில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனால் தடுப்பூசியை இதுவரை பெறாதவர்கள் அவர்களது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எமக்கு தேவையான முழு தடுப்பூசிகளையும் அரசாங்கம் வழங்கி கொண்டிருக்கின்றது. மேலும் இப்பிராந்தியத்தில் உள்ள 20 வயது முதல் 30 வயது வரையானவர்களுக்கும் தடுப்பூசி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

எனவே அரசாங்கம் தற்போது அமுல்படுத்தியுள்ள சட்டதிட்டங்களை மக்களாகிய நீங்கள் அலட்சியம் செய்யாமல் தங்களது நலனில் ஒவ்வொருவரும் அக்கறை எடுக்க வேண்டும்.

டெல்டா திரிபு என்பதை பற்றி பயப்பட வேண்டாம். ஏனெனில் 2 தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கு இதன் தாக்கம் குறைவாக உள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது. 

ஆகவே தேவையற்ற ஒன்று கூடல்களை தவிருங்கள், முகக்கவசங்களை நேர்த்தியாக அணியுங்கள், சமூக இடைவெளிகளை பின்பற்றி கொள்ளுங்கள்.

மேலும் செப்டம்பர் இறுதி பகுதியில் எமது பகுதியில் இந்நோய் தாக்கம் மேலும் மேலும் குறைவடைந்து செல்லும் என்பதை எதிர்பார்க்கின்றோம் என்றார்.

(எம்.என்.எம். அப்ராஸ், நூருள் ஹுதா உமர், பாரூக் சிஹான்)

No comments:

Post a Comment