நாடு திரும்புகின்றனர் உலக சாதனையுடன் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள் - News View

Breaking

Thursday, September 2, 2021

நாடு திரும்புகின்றனர் உலக சாதனையுடன் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள்

எம்.எம். சில்வெஸ்டர்

டோக்கியோ பராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டுக்கு பெருமை சேர்த்த தினேஷ் பிரியன்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்கு ஆகிய இருவரும் நாளை அதிகாலை 3 மணிக்கு இலங்கையை வந்தடைவர்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16ஆவது பராலிம்பிக்கின் ஆண்களுக்கான பிரிவு 46 இன் ஈட்டியெறிதல் போட்டியில் 67.79 மீற்றர் தூரம் வீசி உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று இலங்கை விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தார். ஏனெனில் இதுவே ஒலிம்பிக்கில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கமாகும்.

இவரின் வெற்றியைத் தொடர்ந்து துலான் கொடிதுவக்குவும் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.

இவ்விருவரினதும் வெற்றியின் மூலமாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு சற்று ஆறுதலையும் மனமகிழ்ச்சியையும் கொடுத்தது எனலாம்.

இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமென்டில் சார்ஜன்ட் ஆக சேவை செய்து வந்த தினேஷ் பிரியன்தவுக்கு வாரன்ட் அதிகாரியாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

நாளை இலங்கை வரும் தினேஷ் மற்றும் துலான் ஆகிய இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வொன்றை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அவர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகை குறித்தும் அமைச்சின் உயர் மட்ட குழுவொன்று நேற்றைய தினம் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment