ஜப்பானில் மொடர்னா தடுப்பு மருந்தில் `கறுப்பு துகள்கள்` - கலப்படமா என அச்சம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

ஜப்பானில் மொடர்னா தடுப்பு மருந்தில் `கறுப்பு துகள்கள்` - கலப்படமா என அச்சம்


ஜப்பானில் மொடர்னா தடுப்பு மருந்தில் கறுப்பு துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதால் அந்த பேட்ச் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அந்நாடு.

தடுப்பு மருந்தின் ஒரு குப்பியில் பல கறுப்பு நிற துகள்களை மருந்தாளர் ஒருவர் பார்த்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 3 ஆயிரத்து 790 பேருக்கு அந்த பேட்சில் உள்ள தடுப்பு மருந்து வழங்கப்பட்டு விட்டது இருப்பினும் மீதமுள்ள தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதை ஜப்பான் நிறுத்தியுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்புதான் 1.63 மில்லியன் மொடர்னா தடுப்பு மருந்தை தற்காலிகமாக நிறுத்தியது ஜப்பான்.

தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு முன் ஏதேனும் அந்நிய பொருட்கள் அதில் உள்ளனவா என்ற சோதனையில்தான் இந்த கறுப்பு துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கலப்படம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் தடுப்பு மருந்து உள்ளூர் விநியோகஸ்தரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இதுவரை யாருக்கும் எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் டகேடா என்னும் மருந்து நிறுவனம்தான் தடுப்பு மருந்தை விநியோகித்து விற்பனையும் செய்கிறது. 

கடந்த வாரம் ஏதோ ஒரு அந்நிய பொருள் தடுப்பு மருந்தில் தென்பட்டதால் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பு மருந்தை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டனர்.

ரோவி எனும் ஸ்பெயினை சேர்ந்த மருந்து நிறுவனம்தான் இந்த தடுப்பு மருந்தை பாட்டில்களில் அடைக்கிறது. இந்த கலப்படம் பைப் லைனால் ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை ஒன்றில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த சம்பவம் குறித்து பேசிய ஜப்பானின் சுகாதாரத் துறை அமைச்சர், மருந்து குப்பிகளில் ஊசி தவறாக செலுத்தப்பட்டதே அதற்கு காரணம் என்று கூறியிருந்தார்.

ஜப்பானில் டோக்யோ ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

ஃபைசர், ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளுக்கு ஏற்கெனவே ஜப்பானில் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம்தான் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜப்பானில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி மிக தாமதமாகவே நடைபெற்று வருகிறது. அதன் மக்கள் தொகையில் வெறும் 40 சதவீதம் பேர்தான் இரு டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர். 50 சதவீதம் ஒரு டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட கலப்பட சம்பவம்
கடந்த வாரம் தடுப்பூசி மருந்துக் குப்பிகளில் கலப்படம் இருப்பதாகக் கூறி ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான மொடர்னா தடுப்பூசியின் 16.3 லட்சம் டோஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

5.6 லட்சம் தடுப்பூசி மருந்து குப்பிகளைக் கொண்ட ஒரு பேட்சில் சில டோஸ்களில் மருந்து அல்லாத வேறு கலப்பட பொருள்கள் (ஃபாரின் ஆப்ஜக்ட்ஸ்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

"தடுப்பூசியின் வீரியம், பாதுகாப்பு தொடர்பான எந்தப் பிரச்னையும் இதுநாள் வரை அடையாளம் காணப்படவில்லை," என்று மொடர்னா தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment