இலங்கை அணியுடன் இணைந்து செயற்பட தயார் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

இலங்கை அணியுடன் இணைந்து செயற்பட தயார் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்

இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரங்கன ஹேரத் தற்போது பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சு ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார். இவர், எதிர்வரும் ரி 20 உலகக் கிண்ணத் தொடர்வரை பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சு ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர், இவர் பங்களாதேஷ் அணியுடன் இணைந்து செயற்படுவாரா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. 

இந்த நிலையில், ரங்கன ஹேரத்துக்கு இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வம் இருக்கிறதா? என்பது தொடர்பில் எமக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

“20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் நிறைவடையும் வரை மாத்திரமே பங்களாதேஷ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். அதற்கு பின்னர், செயற்படுவது தொடர்பில் இதுவரையில் அவர்களுடன் கலந்துரையாடவில்லை.

நான் பங்களாதேஷ் செல்வதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட்டுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். இறுதியில் குறித்த கலந்துரையாடல்கள் சாதகமாக அமையவில்லை. இதனால்தான், பங்களாதேஷ் அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்குமானால், எமது அணியின் சுழல் பந்து வீச்சாளர்களுடன் எனது அனுபவத்தை பகிர்ந்துக்கொள்வதற்கு விருப்பத்துடன், உள்ளேன்” என்றார்.

அடுத்துவரும் 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தங்களுடைய திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினால், வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“ஐபிஎல் தொடர் நிறைவுபெற்ற பின்னர், அதே மைதானங்களில் உலகக்கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து அணிகளிலும் உள்ள சுழல் பந்து வீச்சாளர்களுக்கான வாய்ப்புகள் அதிகம். எந்த அணியை எடுத்துக்கொண்டாலும், அதிகமான சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

என்னை பொறுத்தவரையில், ஆரம்பத்திலிருந்து சரியாக திட்டமிட்டால், ஏனைய அணிகளை விட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி 20 க்கு 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக நடைபெறவுள்ள இரண்டு பயிற்சிப் போட்டிகளில், ஒரு போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment