தடுப்பூசி செலுத்தி முடியும் வரை நாடு முடக்கப்படும் என்பது உண்மையல்ல - அவ்வாறான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை என்கிறார் சன்ன ஜயசுமன - News View

Breaking

Monday, September 13, 2021

தடுப்பூசி செலுத்தி முடியும் வரை நாடு முடக்கப்படும் என்பது உண்மையல்ல - அவ்வாறான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை என்கிறார் சன்ன ஜயசுமன

தடுப்பூசி செலுத்தி நிறைவடையும் வரை, நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது. அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 

அச்சுறுத்தலான பகுதியை சேர்ந்தவர்களுக்கு எதிர்வரும் ஓரிரு தினங்களில் தடுப்பூசிகளை செலுத்தி நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 

30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 96 வீதமானோர் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஊசிக்கு அச்சம் கொண்ட சிலர் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித அச்சமும் இன்றி, அவ்வாறான தரப்பினரும் விரைவில் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், தற்போது 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட தரப்பிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 12 வயதுக்கு மேற்பட்ட தரப்பிற்கு விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், 12 வயதுக்கு குறைவானோருக்கு தடுப்பூசி செலுத்த சில நாடுகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டார். 

அதனால், தடுப்பூசி செலுத்தி நிறைவு செய்யும் சரியான திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

No comments:

Post a Comment