'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் ஓடியோ வெளியீடு - News View

Breaking

Wednesday, September 15, 2021

'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் ஓடியோ வெளியீடு

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.

இந்தப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இயக்குனர் கே பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியிருக்கிறார். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தரண் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஓடியோ வெளியீடு அண்மையில் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்க வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் ஸ்ரீஜர், 'பார்வையாளர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு விடயத்தை பற்றி திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக சொன்னால் அவர்கள் மகிழ்வார்கள் என்ற உளவியல் யதார்த்தத்தை மையப்படுத்தி இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம்.

முதலிரவு என்பது பார்வையாளர்கள் அனைவருடனும் தொடர்புடைய உற்சாகமான விடயம். அது குறித்து இரண்டு மணி நேரம் சந்தோஷமாக எந்த லாஜிக்கை பற்றி கவலைப்படாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் 'முருங்கைக்காய் சிப்ஸ்'.

முதலில் இந்தப் படத்திற்கு 'முந்தானை முடிச்சு' என்று தான் பெயரிட நினைத்தேன். ஆனால் இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் கதையை கூறும்பொழுது, முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் பணிகள் நடைபெறுவதால் வேறு தலைப்பை வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன்,' முருங்கைக்காய் சிப்ஸ்' என்று டைட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என கூற, படக்குழுவினர் அனைவரும் அதனை ஒப்புக் கொண்டனர்.

இந்தப்படத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனை ஒரு நடிகராகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இசையமைப்பாளர் தரண் படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களையும் நான்கு வெவ்வேறு ஜேனரில் இசையமைத்து படத்தின் முகவரிக்கும், வெற்றிக்கும் காரணமாகி இருக்கிறார்' என்றார்.

பின்னர் இப்படத்தின் ஓடியோவை கே பாக்யராஜ் வெளியிட, வருகை தந்திருந்த அனைத்து விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment