நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி : ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி : ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் நகரை அடைந்துள்ளார்.

அந்நாட்டு நேரப்படி, 18ஆம் திகதி பி.ப 2.30 மணியளவில், நியூயோர்க் ஜோன் எஃப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றார்.

'கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில், 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

இதனையொட்டிய வெளிநாட்டு அமைச்சுகள் ரீதியிலான கூட்டத் தொடர், நாளை முற்பகல் ஆரம்பிக்கவுள்ளதோடு, இந்தக் கூட்டத் தொடர்களில் பங்கேற்பதற்காக, அரச தலைவர்கள் பலரும், நியூயோர்க் நகரைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றனர்.

அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாள் முற்பகல் வேளையில், ஜனாதிபதி தனதுரையை ஆற்றவுள்ளார்.

அத்துடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்புக் கூட்டத் தொடரிலும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி தனது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்த்திருக்கிறார்.

இதற்கிடையே, கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment