கெக்கிராவையில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல் - அதிகாரி நடவடிக்கை மேற்கொண்ட சுகாதார மருத்துவ அதிகாரி - News View

About Us

About Us

Breaking

Monday, September 20, 2021

கெக்கிராவையில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல் - அதிகாரி நடவடிக்கை மேற்கொண்ட சுகாதார மருத்துவ அதிகாரி

(எம்.எப்.எம்.பஸீர்)

கெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஊடக அறிவிப்பின் பிரகாரம் மதுபான விற்பனை நிலையங்கள் அத்தியவசிய சேவைப்பட்டியலுக்குள் உள்ளடக்கபடாத நிலையிலும், அவற்றை திறக்க மதுவரித் திணைக்களம் மற்றும் சுகாதார அமைசின் உரிய அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமையையும் மையப்படுத்தி அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் தொற்றுப் பரவல் சூழலை கருத்தில் கொண்டு கெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததக பிராந்திய சுகாதார மருத்துவ பணி மனையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதன்படி கெக்கிராவை நகரில் அமைந்துள்ள 4 மதுபான விற்பனை நிலையங்களையும் மருதன்கடவளை மற்றும் மடாட்டுகம ஆகிய பகுதிகளில் உள்ள இரு மதுபான நிலையங்களுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளின் போது பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்த நிலையில் பொலிசார் எவரும் இருக்கவில்லை.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, மதுபானசாலைகளை திறப்பது தொடர்பிலோ அங்கு இடம்பெறும் விற்பனைகளிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்கு மீறப்படுவதாக கூறி கைதுகள் இடம்பெறக் கூடாது என உயர் மட்டத்திலிருந்து அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே, பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி, தமது அதிகாரத்துக்கு உட்பட்டு கெக்கிராவையில் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment