"பாடசாலைகளை தொடர்ந்து மூடிவைத்து கல்வி நடவடிக்கைகளை முடக்குவது நல்லதல்ல" - சுகாதார அமைச்சர் கெஹலிய - News View

Breaking

Sunday, September 12, 2021

"பாடசாலைகளை தொடர்ந்து மூடிவைத்து கல்வி நடவடிக்கைகளை முடக்குவது நல்லதல்ல" - சுகாதார அமைச்சர் கெஹலிய

பாடசாலைகளை தொடர்ந்து மூடிவைத்து கல்வி நடவடிக்கைகளை முடக்குவது நல்லதல்ல. பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை செலுத்தி, பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 12 வயது முதல் 18 வயது வரையான சிறுவர் சிறுமியர்களுக்கு கொவிட்19 தடுப்பூசியை செலுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் துறைசார் நிபுணர்களுடன் சூம் தொழில்நுட்பத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் கொவிட்19 பரவ ஆரம்பித்த காலம் முதல் இடைக்கிடையே பாடசாலைகள் மூடப்பட்டதுடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை வழமைக்குத் திரும்பவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை செலுத்தி, பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியம் என தெரிவித்த அமைச்சர், சிறுவர் சிறுமியர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதன்படி, தரம் 07 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் தெரித்தார்.

பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதையடுத்து, மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமாயின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். 

இத்திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்க முடியும். அதேபோன்று 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணியும் வேகமாக இடம்பெற்று வருகிறது. தற்போதுவரை அந்த வயது பிரிவினரில் 34 சதவீதமானவர்களுக்கு முதல் டோஸ், 12 சதவீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment