கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் காலமானார் - News View

Breaking

Wednesday, September 8, 2021

கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் காலமானார்

கவிஞரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் அவரது 85 ஆவது வயதில் இன்று காலமானார்.

உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி புலமைப்பித்தன் உயிரிழந்தார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அடையாறில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயோதிபம் மற்றும் உடல் உறுப்புகளின் செயற்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த புலமைபித்தனை, சசிகலா நேற்று நேரில் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964 இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார்.

அவர் சாந்தோம் உயர்நிலை பாடசாலையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

1968 இல் எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றார்.

அதன் பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

புலமைப்பித்தன் கோவை மாவட்டம் பள்ளப்பாளையத்தில் 1935 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் கருப்பண்ணன். தாயார் பெயர் தெய்வானை அம்மாள்.

பாடசாலையில் இறுதி வகுப்பு வரை படித்து முடித்த பிறகு, பஞ்சாலையில் தொழிலாளியாக சேர்ந்தார். வேலை பார்த்துக்கொண்டே பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு 12 ஆண்டுகள் தமிழாசிரியராக நெல்லை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் வேலை செய்தார்.

பின்னர் எம்.ஜி.ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்தார்.

பிறகு எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்து விலகி, அ.தி.மு.க. தொடங்கியபோது, ஆசிரியர் வேலையை விட்டு விலகி, அ.தி.மு.க. கட்சியில் சேர்ந்தார்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, 1978 ம் ஆண்டு, இவர் மேல் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவர் சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது மட்டும் அல்லாமல், "புரட்சித்தீ", "பாவேந்தர் பிள்ளைத் தமிழ்" ஆகிய கவிதை புத்தகங்களையும், "எது கவிதை" என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.

இவர் எழுதிய "பாவேந்தர் பிள்ளைத் தமிழ்" புத்தகம், சென்னை பல்கலைக்கழக எம்.ஏ. வகுப்புக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment