குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்வதை கர்தினால் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - நவ சிங்கள ராவய - News View

About Us

About Us

Breaking

Friday, September 10, 2021

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்வதை கர்தினால் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - நவ சிங்கள ராவய

இராஜதுரை ஹஷான்

பிரதமர் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்வதற்கு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் அனுமதியை பெற வேண்டுமா? கர்தினால் நாட்டின் உள்ளக பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முயன்றால் அவர் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனாக கருதப்படுவதுடன், கத்தோலிக்க சபை தமிழ் தேசிய கூட்டமைப்பாகவும் கருதப்படும். தாய் நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என நவ சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.

நவ சிங்கள ராயவ அமைப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இத்தாலி விஜயம் குறித்து மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக காணப்படுகின்றன.

பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வதற்கும், வத்திக்கான் செல்வதற்கும் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையிடம் அனுமதி பெற வேண்டுமா ? ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவ விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சியை கர்தினால் முன்னெடுக்கிறார்.

பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தை மூடிமறைக்கும் வகையில் பரிசுத்த பாப்பரசரை சந்திக்கவுள்ளதாக கர்தினால் எவ்வாறு குறிப்பிட முடியும்.

கர்தினாலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி அவருக்கு அழைப்பு விடுத்த போதும் அவர் நிபந்தனை விதித்து பேச்சுவார்த்தையை மறுத்துள்ளார். இதன் பின்னணியில் அரசியல் இலாபம் உள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்வதை கர்தினால் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment