நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீர்குலைந்திருக்கும் சூழ்நிலையில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அரசாங்கம் விசேட சலுகைகளை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - சஜித் பிரேமதாஸ - News View

Breaking

Tuesday, September 7, 2021

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீர்குலைந்திருக்கும் சூழ்நிலையில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அரசாங்கம் விசேட சலுகைகளை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - சஜித் பிரேமதாஸ

நா.தனுஜா

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீர்குலைந்திருக்கும் சூழ்நிலையில், முறைகேடான விதத்தில் வருமானம் உழைத்த மற்றும் அதனைக் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு நிதித் திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கம் விசேட சலுகைகளை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் வரி செலுத்தாமல் இருப்பவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமைவதுடன் நியாயமாக செயற்படுவோருக்கு எவ்வித நன்மையும் இல்லை என்ற தவறான செய்தியையும் கடத்தக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று செவ்வாய்கிழமை ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் விசேட அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக சீர்குலைந்திருக்கும் சூழ்நிலையில், முறைகேடான விதத்தில் வருமானம் உழைத்த மற்றும் அதனைக் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு நிதித்திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக விசேட சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.

நாட்டை முன்நகர்த்திச் செல்வதற்கு வருமானம் இன்றியமையாததாகும். நேர் மற்றும் நேரில் வரி வசூலிப்புக்களே எந்தவொரு நாட்டினதும் பிரதான வருமான மார்க்கங்களாகும்.

தற்போது எமது நாடு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதனை எதிர்கொள்வதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் நிதி அவசியமாகும். அதனை அரச வருமானத்தின் ஊடாகவே திரட்டிக் கொள்ள முடியும்.

அதேவேளை எவரேனும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை உரியவாறு செலுத்தா விட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கான தண்டனைகளை வலுப்படுத்துவதே அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment