இறக்குமதியை நிறுத்தாது சர்வதேச நாணய நிதியத்திடம் நிவாரணங்களை பெறுங்கள் : எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று சிறுபிள்ளத்தனமானது அரசியல் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணம் - ஐக்கிய தேசியக் கட்சி - News View

Breaking

Monday, September 13, 2021

இறக்குமதியை நிறுத்தாது சர்வதேச நாணய நிதியத்திடம் நிவாரணங்களை பெறுங்கள் : எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று சிறுபிள்ளத்தனமானது அரசியல் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணம் - ஐக்கிய தேசியக் கட்சி

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையில் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறிய கூற்று சிறுபிள்ளத்தனமானது. அரசியல் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்தார். அத்துடன் பொருளாதார பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்பதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்திருப்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசியல் பேதங்களை புந்தள்ளிவிட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பெரும் சவாலாகும். அதேபோன்று அதற்கான தேசிய கொள்கை திட்டம் ஒன்றை அமைக்க வேண்டும்.

அத்துடன் நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் மக்கள் மூன்றுவேளை உணவை சரியாக பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கத்துக்கு அழுத்தங்களை காெடுப்பதே எதிர்க்கட்சிகளின் கடமையாக இருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையில், அதனை பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்வது முறையல்ல.

கொவிட் நிலைமையை கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பது சிறுபிள்ளைத்தனமானதாகும். உண்மையில் இது அவரது முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தற்போதுள்ள நிலையில் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என யார் அவருக்கு ஆலாேசனை வழங்கியது என தெரியாது. அரசியல் அனுபவம் இல்லாமையே இதற்கு காரணமாகும். நாட்டின் தற்போதைய நிலைமையில் தேர்தல் ஒன்றுக்கு செல்வது சாத்தியமா என பார்க்க வேண்டும்.

மேலும் மக்கள் பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் அதற்கான தீர்வை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், நடைமுறைக்கு சாத்தியமில்லாத, வேடிக்கையான விடயங்களை தெரிவிக்கக்கூடாது.

பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி 21 யோசனைகள் அடங்கிய பிரேரணை ஒன்றை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் இறக்குமதி பொருட்களை நிறுத்தி, பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க முடியாது.

இதற்கான ஒரேவழி சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொள்வதாகும். இது தொடர்பாக எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு பல தடவைகள் தெரிவித்திருக்கின்றார்.

No comments:

Post a Comment