பாப்பரசரிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிழையான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் செயற்படுகிறது : பேராயர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 8, 2021

பாப்பரசரிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிழையான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் செயற்படுகிறது : பேராயர்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சர்வதேச தரப்பு மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசரிடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பிழையான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் செயற்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை நாட்டின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், "நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலானோர் மரணிக்கின்றனர். கொரோனா தொற்று முழுமையாக இல்லாதொழிக்க வேண்டி நாம் இன்றைய தினம் 24 மணி நேர விசேட செப வழிபாடொன்றை நடத்தி வருகி‍றோம்.

இது போன்று கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவி வரும் இந்த காலத்திலும் கூட, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான உண்மையை மூடிமறைப்பதற்கான சூழ்ச்சியானது மிகவும் நுட்பமான முறையில் முன்னோக்கி கொண்டு செல்லப்படு‍தை அவதானிக்க முடிகிறது. இதனை செயற்படுத்துவது தற்போதுள்ள அரசாங்கமாகும்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பாப்பரசரை தெளிவுப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்ததாக இன்றைய டெய்லி மிரர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமர் மற்றும் ‍வெளிவிவகார அமைச்சர் இத்தாலியின் பொலோக்னா நகரில் நடைறெவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இதையடுத்து வத்திகானிலுள்ள பரிசுத்த பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமான விசாரணை குறித்தும் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை தெளிவுப்படுத்தவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் குறித்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச தரப்பு மற்றும் பரிசுத்த பாப்பரசர் ஆகியோருக்கு தெளிவுப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் சர்வதேச தரப்பு மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசரிடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பிழையான கருத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் செயற்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை நாட்டின் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருவகின்றனர்.

தற்போது உயிர்த்த ஞாயிற தின தாக்குதல் குறித்து இந்த அரசாங்கம் சர்வதேசத்தை அணுக நடவடிக்கை எடுத்துள்ளது. நாமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கு அறிவிக்கவுள்ளோம்.

கடந்த ஜூலை 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிருந்த போதும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அவர்கள் சர்வதேசத்தை நாடினால், நாமும் சர்வதேசத்தை நாடுவோம். எமக்கும் அதைத் தவிர வேறு வழியில்லை.

ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம். இந்த குண்டுத் தாக்குதல்களில் 14 நாடுகளின் 47 வெளிநாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அ‍மெரிக்கா, பிரித்தானி, சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாட்டு பிரஜைகளும் அடங்குகின்றனர். ஆகவே, வெளிநாடுகளும் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இரண்டரை ஆண்டு காலமாக நாம் பொறுமையாக இருந்து வருகிறோம்.உண்மையை வெளியே கொண்டு வந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment