அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் - முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மனு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் - முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் மனு தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுத்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிபேராணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளை மையப்படுத்தி அஜித் நிவார்ட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், அஜித் நிவார்ட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம். ஜே.வை, பி பெர்னான்டோ ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் பதவி வகித்திருந்த நிலையில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்து நிதி இராஜாங்க அமைச்சராக கடந்த 13 ஆம் திகதி வரை கடமையாற்றியுள்ளார் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்திருந்த நிலையில் அவ்வாணைக்குழுவானது தடயவியல் கணக்காய்வினை முன்னெடுக்க பரிந்துரைத்தது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் பிரதிவாதியான அஜித் நிவாரட் கப்ரால் தொடர்பில் பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தடயவியல் கணக்காய்வு அறிக்கை பிரகாரம் குற்றவியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர் மத்திய வங்கி ஆளுநராக மீள நியமிக்கப்படுவதானது அங்குள்ள சாட்சியங்களை அழிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுவதாக அமையும் எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அதனை தடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இதனை விட குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிராகவும் கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் . எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டால் மத்திய வங்கியில் உள்ள சாட்சியங்களை அழிப்பதற்கு, மாற்றுவதற்கு, சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டும் மனுதாரர் தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளவும் நிதி சட்டத்தின் 12 ஆவது அத்தியாயத்திற்கு அமைய அவரை மத்திய வங்கியின் எந்தவொரு பதவிக்கும் நியமிக்க கூடாது. என ஜனாதிபதி செயலாளர், நிதியமைச்சருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த கட்டளை நீதிபேராணை மனுத்தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி ஷிரால் லக்திலக,உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு மனுதாரர்கள் சார்பில் மன்றில் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment