இரண்டாம் உலகப் போர் : டன்கர்க் மீட்பு வரலாற்றில் மறக்கப்பட்ட இந்திய முஸ்லிம் வீரர்கள் - News View

Breaking

Friday, September 17, 2021

இரண்டாம் உலகப் போர் : டன்கர்க் மீட்பு வரலாற்றில் மறக்கப்பட்ட இந்திய முஸ்லிம் வீரர்கள்

மேஜர் அக்பர் கான் உடன் இந்திய போர் வீரர்கள்

இரண்டாம் உலகப் போரில் டன்கர்க் நகரில் இருந்து நேச நாட்டுப் படைகள் குறிப்பிடத்தக்க வகையில் வெளியேற்றப்பட்டது ஒரு முக்கியமான தருணம். இதில் அறியப்படாதது என்னவென்றால், அதில் கிட்டத்தட்ட 300 இந்திய வீரர்களும் அப்படையின் ஒரு பகுதியாக இருந்தனர் என்பதுதான்.

மே 1940 இல் ஒன்பது நாட்களில், பிரெஞ்சு துறைமுக நகரமான டன்கர்க் கடற்கரை மற்றும் துறைமுகத்தில் இருந்து 3,38,000 க்கும் மேற்பட்ட நேச நாட்டுப் படை வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஐரோப்பிய வீரர்களுக்கு மத்தியில் மேஜர் முகமது அக்பர் கான் என்கிற ஒரு இந்திய வீரரும் இருந்தார்.

மே 28 அன்று, அவர் 300 இந்திய வீரர்களையும் 23 பிரிட்டிஷ் துருப்புக்களையும் கிழக்கு மோலுக்கு வழிநடத்திக் கொண்டிருந்தார்.

போருக்குப் பிறகு 183 செமீ (6 அடி) உயரமுள்ள அந்த சிப்பாய் இந்தியா திரும்பினார், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி செய்த ஒருங்கிணைந்த இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என ஆகஸ்ட் 1947 இல் பிரிக்கப்பட்ட போது, புதிய பாகிஸ்தான் ராணுவத்தில் மூத்த அதிகாரியானார். அவர் முஹம்மது அலி ஜின்னாவின் இராணுவ உதவியாளராக்கப்பட்டார்.

டன்கர்க்கிலிருந்து மீட்பு மேஜர் அக்பர் உட்பட இந்திய வீரர்களை முற்றிலும் மறந்து விட்டனர் என பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் நெய் போமன் கூறுகிறார். அவர் ஐந்து நாடுகளில் ஐந்து ஆண்டுகளை கழித்து, குடும்ப புகைப்பட ஆல்பங்களிலிருந்து இழந்த காப்பகங்கள் மற்றும் புகைப்படங்களைக் பிந்தொடர்ந்து, வீரர்களின் சந்ததியினருடன் பேசி இது தொடர்பான விவரங்களை சேகரித்தார்.

இந்திய வீரர்கள் 25ஆவது விலங்கு போக்குவரத்துக் குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு உதவ தங்கள் கழுதைகளுடன் 7,000 மைல் (11,265 கிமீ) பயணம் செய்தனர்.

அவர்கள் காக்கி உடையணிந்து, தகரக் தலைக்கவசம், தலைப்பாகை அணிந்திருந்தனர். அவர்கள் எந்த ஆயுதங்களையும் எடுத்துச் செல்லவில்லை, ஏனென்றால் அவர்கள் பிரான்சில் இறங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பஞ்சாபை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஆயுதங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

பிரான்சில் கடுமையான குளிர்காலத்தில், பிரிட்டிஷ் ராணுவத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மாற்றாக கழுதைகள் தேவைப்பட்டன. ஆனால் அவர்களுக்கு "விலங்குகளை கையாளும் திறன்" இல்லாததால், அவர்களுக்கு உதவ இந்தியத் துருப்புக்கள் நிறுத்தப்பட்டன.

போரின் போது சுமார் 50 லட்ச காமன்வெல்த் வீரர்கள் பிரிட்டிஷ் பேரரசின் ராணுவ சேவைகளில் சேர்ந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். டன்கர்க்கில் இந்திய வீரர்களுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

"இந்த வீரர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின் கதை போரில் சொல்லப்படாத கதைகளில் ஒன்றாகும்" என 'தி இண்டியன் கண்டிஜெண்ட்: தி ஃபர்காட்டன் முஸ்லிம் சோல்ஜர்ஸ் ஆஃப் த பேட்டில் ஆஃப் டன்கர்க்" என்கிற புத்தகத்தின் ஆசிரியர் போமன் கூறினார்.

உதாரணமாக, செளத்ரி வாலி முகமதுவை எடுத்துக் கொள்ளுங்கள், "ஜெர்மன் விமானங்கள் பயங்கரமான பறவைகள் போல் பறந்து பறந்து எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நான் 15 நாட்கள் தூங்கவில்லை" என நினைவு கூர்கிறார். அவரும் அவரது குழுவினரும் மே 23 அன்று டன்கிர்க் சென்றடைந்தனர்.

"நாங்கள் டன்கிர்க்கிலிருந்து உயிருடன் வெளியே வருவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. பகல் வெளிச்சம் போல் பல நெருப்புகள் இருந்தன.

"நாங்கள் ஏறி தப்பிக்க வேண்டிய கப்பல் மூழ்கியது. நாங்கள் கடற்கரைக்குச் சென்று கப்பல் மூழ்கியதைக் கண்டோம், எனவே நாங்கள் மீண்டும் காட்டுக்கு ஓட வேண்டியிருந்தது" என்று அவர் பின்னர் நினைவு கூர்ந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, முகமது மற்றும் அவரது படைகள் வெளியேற்றப்பட்டன.

அப்போது ஜெமதார் மவுலா தத் கான் தனது அணியினரும் விலங்குகளும், தரையிலிருந்தும் வான் வழியிலிருந்தும் எதிரிகளால் தாக்கப்பட்ட போது அற்புதமான துணிச்சலை காட்டியதற்காக பாராட்டப்பட்டார்.

"இந்திய வீரர்களின் முக்கியத்துவம் அவர்களின் எண்ணிக்கையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இந்தியர்களாக, பேரரசின் குடிமக்களாக, ஒரு மெளலவி [முஸ்லீம் மதகுரு] மற்றும் பக்ரீஸுடன், உலகின் முற்றிலும் மாறுபட்ட வழியில் இருந்தார்கள் என்பது எளிமையான உண்மை." என போமன் கூறுகிறார்.

இவர்கள் 1940 ஆம் ஆண்டின் பெரும்பகுதியை வடக்கு பிரான்சில், லில்லி நகருக்கு வடக்கே உள்ள ஒரு கிராமத்தில் செலவிட்டனர். கடுமையான குளிர்காலத்திலும், அவர்கள் உடற்பயிற்சி செய்தனர் மற்றும் தங்கள் கழுதைகளுக்கு உணவளித்தனர். அவர்கள் உள்ளூர் கிராமவாசிகளைச் சந்தித்தனர், தங்கள் "வாராந்திர ஜிம்கானாக்கள் நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்".

மே மாதத்தில் ஜெர்மானியர்கள் பிரான்சைத் தாக்கியபோது எல்லாம் வேகமாக மாறின, "இரண்டு வார இடைவெளியில், நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட, பல தேசிய ராணுவத்தின் பகுதியாக இருந்த வீரர்கள், கடற்கரைக்கு பின்வாங்கும் குழப்பமான படையின் ஒரு பகுதியாக மாறி இருந்தனர்", என்கிறார் போமன்.

டோவரை அடைந்ததும், அவர்கள் பஞ்சாபி நாட்டுப்புற இசையை வாசித்ததாக வரலாற்றாசிரியர் கூறுகிறார், அதில் "பல பிரிட்டிஷ் பார்வையாளர்கள் கூட நடனமாடினர்".

அவர்கள் பிரிட்டிஷ் வீடுகளிலும் இதயங்களிலும் வரவேற்கப்பட்டனர், மேலும் அவர்களைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட பொம்மை வீரர்களின் தொகுப்பு இருந்தது.

இந்தியாவில் இருந்து அவர்கள் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்குப் பயணித்து, போரின் முடிவில் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களின் வாழ்க்கை மாறியது. சிலர் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலாந்தில் உள்ள போர் முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் "விடுதலையின் அதிசயம்" என்று அழைத்த புத்தகங்கள் மற்றும் படங்களில் இந்த வீரர்கள் ஏன் மறக்கப்பட்டனர்?

அதற்கு மிக முக்கிய காரணம், அவர்கள் "விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளனர், முன் வரிசை போர் வீரர்கள் அல்ல என்கிறார் போமன். அத்தகைய ஆதரவு துருப்புக்கள் அரிதாகவே நினைவு கூரப்படுகின்றனர்.

"போருக்குப் பிந்தைய சூழல் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஐரோப்பாவில் வெளிப்புற புனரமைப்பு மற்றும் புதிய சமுதாயங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருந்தது. எதிர்காலம் மற்றும் பிரபலமாக மக்கள் நினைவில் இருந்த போரின் கூறுகள் ஒரு குறுகிய புலத்திலிருந்து எடுக்கப்பட்டன, பொதுவாக வெள்ளை முகங்கள் மற்றும் ஆடம்பரமான பின்னணி கொண்டவர்களை உள்ளடக்கியதாக இருந்தது அது.

"இந்தியாவில், சுதந்திரம் மற்றும் பிரிவினைக்கு வழிவகுக்கும் செயல்முறை முன்னுரிமை பெற்றது. வரலாறு எப்போதும் நகரும் மற்றும் விரிவடையும் செயல்முறையாகும்."

சுதா ஜி திலக் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் 'டெம்பில் டேல்ஸ்: சீக்ரட்ஸ் அண்ட் ஸ்டோரிஸ் ஃப்ரம் இந்தியாஸ் சேக்ரட் ப்ளேசஸ்' என்கிற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.

No comments:

Post a Comment