மலையக மக்களின் வாழ்விடங்களை இல்லாமல் செய்து அவர்ளை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் - வேலுகுமார் - News View

Breaking

Thursday, September 9, 2021

மலையக மக்களின் வாழ்விடங்களை இல்லாமல் செய்து அவர்ளை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் - வேலுகுமார்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

தேசிய பண்ணை விலங்கு அதிகார சபையின் ( NLDB) கீழுள்ள சகல பண்ணைகளும் முழுமையான பயன்பாட்டுடன் செயற்படுமாயின் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவை அடையும் என தமிழர் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழர் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்நாட்டின் தேயிலை உற்பத்தில் மலையக மக்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்ட மக்கள், தங்களின் வாழ்க்கையை வசதியாக மாற்றுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.

அவர்களின் வாழ்வாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு பால் பண்ணை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அதற்குத் தேவையான ஆடு, மாடு, பசு ஆகிய கால்நடைகளை வழங்கி நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான செயற்திட்டங்களை முன்னெடுக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தேசிய பண்ணை விலங்கு அதிகார சபையின் ( NLDB) கீழுள்ள 31 பண்ணைகளும் முழுமையான பயன்பாட்டுடன் செயற்படுமாயின் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவை அடையும்.

அதைவிடுத்து, மலையக பெருந்தோட்ட காணிகளில் பால் பண்ணை நிறுவனங்களை நிறுவுவதற்காக அமைச்சர் மஹிந்தானந்த அமைச்சரவை அனுமதியைப் ‍பெற்றுள்ளமை மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் விடயமாகும்.

மக்களின் வாழ்விடங்களை இல்லாமல் செய்து அவர்ளை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டாம். மேலும், இதே நிலைமை மலையக பெருந்தோட்ட மக்கள் வாழக்கூடிய கேகாலை மற்றும் இரத்தினபுரிய ஆகிய மாவட்டங்களிலும் எதிர்காலத்தில் நடைபெறும்.

ஆகவே, மலையக மக்களின் வாக்குகள் மூலம் அமைச்சுப் பதவிகளையும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் பெற்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நீங்கள் மக்களுக்காக சிந்தித்து செயற்படுங்கள் என்றார்.

No comments:

Post a Comment