உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளிவந்த தகவல்களை பேராயர் மற்றும் கத்தோலிக்க பிஷப் மாநாட்டு பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்த தீர்மானம் - வத்திக்கான் தூதுவரிடம் உறுதியளித்தார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - News View

Breaking

Wednesday, September 1, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் வெளிவந்த தகவல்களை பேராயர் மற்றும் கத்தோலிக்க பிஷப் மாநாட்டு பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்த தீர்மானம் - வத்திக்கான் தூதுவரிடம் உறுதியளித்தார் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின்போது வெளிவந்த தகவல்கள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க பிஷப் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் அதற்கான சந்திப்பொன்றை எதிர்வரும் சில தினங்களில் ஏற்பாடு செய்வதாகவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாப்பரசரின் வத்திக்கான் தூதுவர் பேராயர் பிரையன் உடேக்வேயிடம் உறுதியளித்துள்ளார்.

பாப்பரசரின் வத்திக்கான் தூதுவர் பேராயர் பிரையன் உடேக்வே நேற்று செவ்வாய்கிழமை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஆயுதப் படைகளால் நிர்மாணிக்கப்பட்ட நீர்கொழும்பு, பொலவலானாவில் அமைந்துள்ள பெனடிக்ட் ஓஏஐ கத்தோலிக்க நிறுவனத்திற்கு பட்டம் வழங்கும் அந்தஸ்தை வழங்கியமை கல்வி அமைச்சராக தான் பணியாற்றிய போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும் என்று இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல், சமுதாய சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு ஏற்றவாறான கட்டமைப்பொன்றை நிறுவுவதன் அவசியம் தொடர்பிலும் அவர் எடுத்துரைத்தார்.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் பேரிடர், கத்தோலிக்க திருச்சபை அனுபவித்த வலி, துன்பம், கத்தோலிக்கத் திருச்சபையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் அதற்குப் பொறுப்பான அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்துதல் ஆகியவை தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் தன்மை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க பிஷப் பேரவையின் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்துவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் அதன்படி உரிய தகவல்களை வெளிப்படுத்துவதற்கு அவசியமான கலந்துரையாடலொன்று அவசியம் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

மேலும் கத்தோலிக்க திருச்சபையின் நேர்மையான எதிர்பார்ப்பையும் வேதனையையும் அதன் தூய்மையான நோக்கங்களையும் அரசாங்கம் சரியாக புரிந்து கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் மற்றும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவற்றின் அமர்வுகளை இலக்காகக் கொண்டு, கத்தோலிக்க திருச்சபையின் உண்மையான நோக்கங்களுக்கு முரணான நிலைப்பாட்டை தமது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும் சில குழுக்கள் தொடர்பிலும் பாப்பரசரின் வத்திக்கான் தூதுவரிடம் அமைச்சர் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் தூய்மையான நோக்கங்கள் உள்நாட்டிலோ அல்லது சர்வதேசத்திலோ புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து விதங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை சிறுபான்மையினராக இருப்பினும் இலங்கையில் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் கத்தோலிக்கர்கள் உரிய மதிப்புடன் நடாத்தப்படுகின்றமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்த பேராயர் பிரையன் உடேக்வே, வேறு சில நாடுகளில் இவ்வாறான அஙகீகாரத்தைதான் அவதானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தேவாலயத்தின் பிரதிநிதிகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கலந்துரையாட முடியும் என்றும் அதற்கேற்றவாறு பிஷப் மாநாட்டின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பொன்றை எதிர்வரும் சில நாட்களுக்குள் ஏற்பாடு செய்யுமாறும் அவர் அமைச்சரிடம் பரிந்துரையொன்றை முன்வைத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், குறித்த கலந்துரையாடலின்போது முழுமையான தகவல்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ்மா அதிபர் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அரச நிறுவனங்களிடமிருந்து அனைத்து விதமான தகவல்களையும் திரட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment