ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு : பிணைக் கோரிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பதிலை வழங்குமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 7, 2021

ரிஷாட் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு : பிணைக் கோரிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பதிலை வழங்குமாறு உத்தரவு

கடந்த 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சினமன் கிராண்ட் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அவ்வழக்கின் 7ஆவது சந்தேகநபரான முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (07) கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

இதேவேளை, குறித்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரசா அதிபர் மொஹமட் சகீல் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் தொடர்பில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் குழுவினால் பிணை தொடர்பாக எழுத்து மூலமான வாதங்கள் மன்றில் முன்வைக்கப்பட்டதோடு, அதனை கருத்தில் கொண்ட நீதவான், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதற்கான பதிலை வழங்குமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

ரிஷாட் பதியுதீன் தொடர்பில் பொய்யான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையெனவும், அவர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிணைக் கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றில் வாதிட்டார்.

ரிஷாட் பதியுதீன், கைத்தொழில் வர்த்தக அமைச்சராக இருந்தபோது, சினமன் கிராண்ட் தாக்குதல்தாரியான மொஹமட் இப்ராஹிம் அஹமட் இன்ஷாப் என்பவரின் வெல்லம்பிட்டியிலுள்ள தொழிற்சாலைக்கு கைத்தொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உலோகப் பொருட்கள் மூலம் குறித்த தாக்குதல்தாரி முறையற்ற வகையில் சம்பாதித்த பணத்தை பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 7 பேரும் மன்றிற்கு அழைத்து வரப்படவில்லை என்பதோடு, சந்தேகநபர்களை அவர்கள் இருக்கின்ற சிறையிலிருந்தவாறு வீடியோ தொழில்நுட்பம் ஊடாக அவதானித்த நீதவான் குறித்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment