இலங்கையில் ஒரு மாதத்தில் கொவிட் மரணங்கள் 50 வீதத்தால் அதிகரிப்பு, புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளது - எச்சரிக்கை விடுக்கின்றனர் வைத்திய நிபுணர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 1, 2021

இலங்கையில் ஒரு மாதத்தில் கொவிட் மரணங்கள் 50 வீதத்தால் அதிகரிப்பு, புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளது - எச்சரிக்கை விடுக்கின்றனர் வைத்திய நிபுணர்கள்

(ஆர்.யசி)

நாட்டில் வேகமாக பரவிக் கொண்டுள்ள டெல்டா வைரஸின் தாக்கத்தினால் கடந்த மாதத்தில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், தென்னாபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவும் நிலை ஏற்பட்டால் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளதாகவும் சுகாதார, வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் இதுவரை நாட்டின் கொவிட் தாக்கங்கள் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர கூறுகையில்,

சி.1.2 என்ற தென்னாபிரிக்க வைரஸ் மற்றும் "மூ" கொலம்பிய வைரஸ் ஆகியவை தற்போது பாவனையில் உள்ள தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாதவை என கூறப்படுகின்றது.

எனவே இலங்கையில் இந்த வைரஸ்களில் ஏதேனும் ஒன்றேனும் பரவினால் தற்போது பதிவாகும். கொவிட் மரணங்களை விட மூன்று மடங்கு மரணங்கள் நாட்டில் ஏற்படும் அபாயநிலை எம்மெதிரே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி இது குறித்து கூறுகையில், நாம் புதிய வைரஸ் தொற்றுக்குள் சிக்கிக் கொண்டால், புதிய வைரஸ் பரவலுக்கு இடமளித்தால் கொவிட் மரணங்களால் எண்ணிக்கை இந்த ஆண்டுக்குள் 30 ஆயிரத்தை அண்மிக்கலாம். எனவே இந்த அச்சுறுத்தல் நிலைமையை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.

இது குறித்து இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி நாட்டின் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,508 ஆககாணப்பட்டது. செப்டெம்பர் 1 ஆம் திகதி இந்த எண்ணிக்கை ஒன்பதாயிரத்தை கடந்துள்ளது.

அப்படியென்றால் இந்த ஒரு மாதத்தில் 50 வீதத்தால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலைமையை வெளிப்படுத்துகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த மாதத்தில் மரண எண்ணிக்கை நூறுக்கு முன்னூறு என்ற ரீதியில் அதிகரிக்கும். இது நாட்டின் சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது பொருளாதாரத்தையும் வெகுவாக பாதிக்கும் என்றார்.

No comments:

Post a Comment