இலங்கையில் ஒரு வார காலத்தில் மரண வீதமானது 4.02 ஆக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

இலங்கையில் ஒரு வார காலத்தில் மரண வீதமானது 4.02 ஆக அதிகரிப்பு

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்று பரவலால் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வாராந்த பகுப்பாய்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 3 ஆம் திகதி வரையான ஒரு வார காலத்தில் மரண வீதமானது 4.02 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் பிரிவினால் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பதிவான மரணங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் குறித்த ஒரு வாரத்தில் 1,386 மரணங்கள் பதிவாகியிருந்தோடு, அந்த எண்ணிக்கை இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கையில் 3.51 சதவீதமாகவும் காணப்பட்டது. எனினும் இது தற்போது 4 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொவிட் தொற்று முதன் முதலில் இனங்காணப்பட்ட 2020 மார்ச் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வரை 8,371 மரணங்கள் பதிவாகியுள்ளன. இது நூற்றுக்கு 1.98 சதவீதமாகும்.

எனினும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் இம்மாதம் 3 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தில் 35,661 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் 1,435 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு வாரத்தில் மேல் மாகாணத்தில் 5,221 மரணங்கள்
இந்த வாரத்திலும் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 5,221 ஆகும். இது நூற்றுக்கு 53 சதவீதமாகும்.

இதே போன்று மத்திய மாகாணத்தில் 1,027 மரணங்களும் (10.5%), சப்ரகமுவ மாகாணத்தில் 795 மரணங்களும் (8.1 % ) தென் மாகாணத்தில் 765 மரணங்களும் (7.8ம % ), வடமேல் மாகாணத்தில் 659 மரணங்களும் (6.7 % ), கிழக்கு மாகாணத்தில் 402 மரணங்களும் (4.1 % ), ஊவா மாகாணத்தில் 335 மரணங்களும் (3.4 % ), வடமத்திய மாகாணத்தில் 307 மரணங்களும் (3.1 % ) மற்றும் வட மாகாணத்தில் 295 மரணங்களும் (3.0 % ) பதிவாகியுள்ளன.

60 வயதுக்கு மேற்பட்ட 77.7 வீதமானோர் உயிரிழப்பு
குறித்த ஒரு வார காலப்பகுதியில் பதிவான 1,435 மரணங்களில் 1,115 மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்டோருடையதாகும். இது நூற்றுக்கு 77.7 சதவீதமாகும். இதே போன்று 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 295 பேர் உயிரிழந்துள்ளதோடு , 30 வயதுக்கு உட்பட்ட 25 பேரும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

14,000 பேருக்கு வீடுகளிலேயே சிக்சை
கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் இதுவரையில் 61,843 பேருக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 14,239 பேருக்கு தற்போதும் சிகிச்சையளிக்கப்படுவதோடு , 749 பேர் மாத்திரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இதேவேளை நேற்றைய தினம் மாலை வரை 2,915 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 4,74,780 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 3,89,969 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 74,122 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறுதியாக பதிவான மரணங்கள்
நேற்று புதன்கிழமை 185 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 102 ஆண்களும் 83 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 140 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அதற்கமைய நாட்டில் அதற்கமைய கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,629 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments:

Post a Comment