மன்னார், கற்பிட்டி - துடாவ மற்றும் அரிப்பு கடலோரப் பகுதிகளில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 1,628 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் ஒரு தொகை மின்சாதன பொருட்களை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்த 5 சந்தேகநபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (10) நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை (11) மேற்கொள்ளப்பட்ட குறித்த நடவடிக்கையில், 2 டிங்கி படகுகளை கைப்பற்றியுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
நேற்று (10) இரவு கற்பிட்டி துடாவ கடற் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, துடாவ கரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான படகை சோதனையிட்டபோது, 31 உரப்பைகளில் அடைக்கப்பட்ட 1,134 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் மேலும் 2 பொதிகளில் காணப்பட்ட வீட்டு மின்சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் இலத்திரனியல் பொருட்களும் காணப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து குறித்த பொருட்கள் மற்றும் 3 சந்தேகநபர்களுடன் குறித்த டிங்கி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, இன்று (11) காலை அரிப்பு முகத்துவாரம் பிரதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அரிப்பு பிரதேசத்தை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை சோதனையிட்டபோது, 17 உரப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையிலிருந்த 494.1 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான படகிலிருந்த 2 சந்தேகநபர்களுடன் டிங்கிப் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், கற்பிட்டி மற்றும் பேசாலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கற்பிட்டி துடாவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், உலர்ந்த மஞ்சள், மின் உபகரணங்கள், டிங்கி படகுகள் ஆகியவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரிப்பு முகத்துவார பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், யாழ் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட முன்னர், தனிமைப்படுத்தலுக்காக பொதுச் சுகாதார பரிசோதகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு, உலர் மஞ்சள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment