மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக கடமையேற்றார் அஜித் நிவார்ட் கப்ரால் : 13 மாத எம்.பி. பதவி தொடர்பில் திருப்தியடைவதாக தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 15, 2021

மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக கடமையேற்றார் அஜித் நிவார்ட் கப்ரால் : 13 மாத எம்.பி. பதவி தொடர்பில் திருப்தியடைவதாக தெரிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நேற்றுமுன்தினம் (13) தனது இராஜாங்க பதவியை இராஜினாமா செய்துள்ள அஜித் நிவார்ட் கப்ரால், இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

பிரசித்தி பெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவார்ட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும் சுமார் 9 வருட காலப்பகுதி வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நியமனக் கடிதம் பெறும் நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தான் வகித்த 13 மாத கால எம்.பி. பதவி தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டு ட்விற்றர் பதிவொன்றை கப்ரால் வெளியிட்டுள்ளார்.

manthri.lk இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6ஆவது இடத்தில் உள்ள அவர், தேசியப்பட்டியல் எம்.பிக்களில் முதலாவது இடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

86 நாள் பாராளுமன்ற அமர்வில் 79 நாட்கள் அவர் வருகை தந்துள்ளதோடு, 140 தடவைகள் ஆக்கபூர்வமான குறுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாக அதில் தெரிவித்துள்ள அவர், அதனை திறன்பட மேற்கொள்ள உதவிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment