விவசாயத்துக்கு வருடாந்தம் 15 ஆயிரம் மெற்றிக் தொன் இயற்கை உரம் தேவை - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

விவசாயத்துக்கு வருடாந்தம் 15 ஆயிரம் மெற்றிக் தொன் இயற்கை உரம் தேவை - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே

மத்திய மாகாணத்தில் வருடாந்தம் 15 ஆயிரம் மெற்றிக் தொன் இயற்கை உரம் தேவைப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் சேதன விவசாயத்தை விஸ்தரித்து, இயற்கை உரத்தின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் மேம்படுத்துவது பற்றி நேற்று முன்தினம் (16) நடைபெற்ற நிகழ்நிலை மாநாட்டில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் வருடாந்தம் 15 ஆயிரம் மெற்றிக் தொன் இயற்கை உரம் தேவைப்படுகிறது. எனவே, பெரும் போகத்திற்குத் தேவையான இயற்கை உரத்தைப் பெறுவதற்காக சேதனப் பசளை உற்பத்தியை அதிகரிப்பது பற்றியும், தம்புள்ள மற்றும் குண்டசால திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்கள் சார்ந்த சேதனப் பசளை உற்பத்தி நிலையங்களின் ஆற்றல்களை விஸ்தரிப்பது பற்றியும் இதன் போது ஆராயப்பட்டது.

மத்திய விவசாய அமைச்சு, மாகாண விவசாய அமைச்சு, விவசாய நிறுவனங்கள், உள்ளூராட்சி அமைப்புக்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் 35 கோடி ரூபா பெறுமதியான இயற்கை உர உற்பத்தி வேலைத் திட்டம் அமுலாகிறது. இந்த வேலைத்திட்டம் பற்றி சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. முன்னேற்றப் பரிசீலனையும் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் எண்ணக்கருவில் உதித்த சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, விவசாயிகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மக்கள் நச்சுத்தன்மை இல்லாத உணவுகளைப் பெற வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்கால சந்ததியை தொற்றா நோய்களிலிருந்து பாதுப்பதும் அவசியம். அத்துடன், உர இறக்குமதிக்கான பெரும் செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், இயற்கை உரப் பாவனையை பிரபல்யப்படுத்த சகலரும் புரிந்துணர்வுடன் வேலை செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பும் அவசியம் என மத்திய மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment