A/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பாது சில அதிபர்கள் பொறுப்புகளை தட்டிக்கழிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

A/L மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்பாது சில அதிபர்கள் பொறுப்புகளை தட்டிக்கழிப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் விண்ணப்பங்கள் இதுவரை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்காத பாடசாலை அதிபர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை தட்டிக்கழித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

அதற்கிணங்க அது தொடர்பில் மேன்முறையீடு ஒன்றை சமர்ப்பித்து உரிய விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களுக்கான விண்ணப்பங்களை அனுப்பும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் விண்ணப்ப படிவங்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதேவேளை இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திப் போடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதா என பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் கேள்வி எழுப்பிய போது, அவ்வாறானதொரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14ஆம் திகதியும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்த இறுதித் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment