இலங்கை கடற்படையினரால் ரூபா. 157 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் மேலும் 9 வெளிநாட்டவர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 18, 2021

இலங்கை கடற்படையினரால் ரூபா. 157 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் மேலும் 9 வெளிநாட்டவர்கள் கைது

வெளிநாட்டு மீன்பிடி படகொன்றில் கடத்தப்பட்ட 170.866 கிலோ கிராம் (பொதியுடன்) ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 9 வெளிநாட்டவர்களும் இன்று (18) காலை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி, இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மேற்கொண்ட சோதனையில் ரூபா 1,575 மில்லியனுக்கும் (ரூ. 157.5 கோடி) அதிக பெறுமதியான குறித்த ஹெரோயினுடன் 9 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கடற்படை புலனாய்பு பிரிவு, அரச புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட ஆழ்கடல் சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட சுமார் 290.2 கிலோ கிராம் ஹெரோயினுடன் பல நாள் மீன்பிடி விசைப்படகிலிருந்த 5 சந்தேகநபர்கள் கடந்த ஓகஸ்ட் 31ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதோடு, தெற்கு சர்வதேச கடலில் மற்றொரு நடவடிக்கையில் 336.3 கிலோ கிராம் ஹெரோயினுடன் வெளிநாட்டைச் சேர்ந்த பல நாள் மீன்பிடி படகிலிருந்த 7 வெளிநாட்டு சந்தேகநபர்கள், கடந்த செப்டம்பர் 04ஆம் திகதி கடற்படையினால் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அதற்கமைய மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் இலங்கை பொலிஸார் வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலும், இலங்கை கடற்படையானது, சர்வதேச கடலில் மற்றொரு விசேட ஆழ்கடல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இதன்போது, இலங்கையிலிருந்து சுமார் 850 கடல் மைல்கள் (சுமார் 1574 கி.மீ.) தொலைவில், இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பரப்பில் பயணித்த சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு மீன்பிடி படகை சோதனையிட்டபோது, 150 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 170.866 கிலோ கிராம் (பொதியுடன்) ஹெரோயின் மற்றும் அபின் என சந்தேகிக்கப்படும் 306 கிராம் போதைப் பொருளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த பல நாள் வெளிநாட்டு மீன்பிடி படகிலிருந்த 9 வெளிநாட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கமைய இன்றையதினம் (18) கடற்படையினரால் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பல நாள் மீன்பிடி எனும் போர்வையில் போதைப் பொருள் கடத்தல் காரர்களால் ஆழ்கடலில் வைத்து போதைப் பொருளை மீன்பிடி படகுகளில் கைமாற்றம் செய்து, அவற்றை கரையை நோக்கி கொண்டு செல்வதற்காக, குறித்த பல நாள் வெளிநாட்டு படகை, சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தி வைக்க போதைப் பொருள் கடத்தல் காரர்களால் திட்டமிடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் இன்று வரை கடற்படையால் நடத்தப்பட்ட முக்கிய போதைப் பொருள் சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ரூ. 7 பில்லியன் என நம்பப்படுகின்றது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டல்களின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டு சந்தேகநபர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின், வெளிநாட்டு சந்தேகநபர்கள், மீன்பிடி படகு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் ஆகியன இணைந்து மேற்கொள்வுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment