செல்வந்த நாடுகளிடம் மேலதிகமாக 1.2 பில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பு - News View

Breaking

Tuesday, September 7, 2021

செல்வந்த நாடுகளிடம் மேலதிகமாக 1.2 பில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பு

இந்த ஆண்டு முடிவில் வறிய நாடுகளுக்கு வழங்குவதற்கு அல்லாமல் மேலதிகமாக ஒரு பில்லியனுக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் செல்வந்த நாடுகளிடம் கையிருப்பில் இருக்க வாய்ப்பு உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகளின் நன்கொடைக்காக ஒதுக்கப்பட்டுள்ள 360 மில்லியனுடன் சேர்த்து தடுப்பூசி கையிருப்பு இந்த மாதத்தில் 500 மில்லியனைத் தொட்டிருப்பதாக தரவு ஆய்வு நிறுவனமான ஏயார்பினிட்டியின் புதிய ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இந்த ஆண்டு முடிவில் இந்த நாடுகளிடம் மேலதிகமாக 1.2 பில்லியன் தடுப்பூசிகள் இருக்கும் என்பதோடு இதில் நன்கொடையாக வழங்குவதன்றி 1.06 பில்லியன் தடுப்பு மருந்துகள் கையிருப்பில் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்குதில் நீடிக்கும் ஏற்றத்தாழ்வு பற்றி முன்னணி சுகாதார நிபுணர்கள் மற்றும் ஐ.நா ஆதரவு சர்வதேச தடுப்பு மருந்து பகிர்வு திட்டமான கொவெக்ஸ் அதிகாரிகள் கண்டித்துள்ளனர். 

கொவெக்ஸ் திட்டத்தில் உலக மக்கள் தொகையில் 20 வீதத்தினருக்கு தடுப்பு மருந்து செலுத்துவதை உறுதி செய்யும் வகையில் 92 குறைந்த வருமானம் பெறும் நாடுகள் உட்பட 190 நாடுகளின் மக்களுக்கு இரண்டு பில்லியன் தடுப்பு மருந்துகளை இந்த ஆண்டில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எனினும் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுடன் செல்வந்த நாடுகள் ஒப்பந்தங்களை செய்வதால் கொவெக்ஸ் திட்டத்திற்கான தடுப்பு மருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கிறது.

தடுப்பு மருந்தில் உள்ள சர்வதேச ஏற்றத்தாழ்வு ‘ஏற்க முடியாதது’ என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜி20 சுகாதார அமைச்சர்கள் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் குறிப்பிட்டிருந்தார்.

உலகெங்கும் 5 பில்லியன் தடுப்பூசிகள் பயற்படுத்தப்பட்டபோதும் அதில் சுமார் 75 வீதமான டோஸ்கள் வெறுமனே 10 நாடுகளில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதில் ஆபிரிக்க பிராந்தியத்தில் 2 வீதமான தடுப்பு மருந்துகளே செலுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment