மஜ்மா நகரில் இன்னும் 12,000 ஜனாஸாக்களை அடக்க முடியும் என்றோ அதற்காக 10 ஏக்கர் காணியுள்ளது என்றோ கருத்துத் தெரிவிப்பதனை ஏற்க முடியாது - சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

Breaking

Sunday, September 12, 2021

மஜ்மா நகரில் இன்னும் 12,000 ஜனாஸாக்களை அடக்க முடியும் என்றோ அதற்காக 10 ஏக்கர் காணியுள்ளது என்றோ கருத்துத் தெரிவிப்பதனை ஏற்க முடியாது - சட்டத்தரணி ஹபீப் றிபான்

கொரோவினால் மரணித்தவர்களை எரிக்கின்ற சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகமானது என்ன நிலையிலாவது ஜனாஸாக்களை அடக்க வேண்டுமென்று அரசாங்கத்தை வேண்டிய வண்ணமிருந்தது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸானது இதற்காக வேண்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதன் பிரதிபலனாக அரசாங்கம் இரணமடுவில் அடக்கம் செய்ய அனுமதியளித்தது.

இதற்கெதிராக அங்குள்ள மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பினைத் தெரிவித்த சந்தர்ப்பத்தில் நாம் கொரோனா ஜனாஸாக்களை எமது பிரதேசமான மஜ்மா நகரில் அடக்கம் செய்யலாம் என்று நமது நாட்டிக்கு செய்தியினைக்கூறி இடத்தினை ஒதுக்கிக் கொடுத்ததனூடாக இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் மரணிப்பவர்களை மஜ்மா நகரிலே இன்று வரை அடக்கி வருகின்றனர்.

தற்பொழுது அதிகரித்துக் காணப்படுகின்ற கொரோனா மரணங்கள் காரணமாக தொடர்ந்தும் ஜனாஸாக்கள் மஜ்மா நகரிலே அடக்கம் செய்யப்படுமானால், ஏற்கனவே காணி பற்றாக்குறையாகவுள்ள நிலையில் நமது எதிர்காலத் தேவைக்காகப் பயன்படுத்துவதற்காக காணியற்றுப் போகும் நிலையேற்படும்.

இவ்விடயம் தொடர்பாக எனது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களான அஸீஸுர் றஹீம் மற்றும் ஹாமித் மௌலவி ஆகியோர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக் கூட்டத் தொடரிலும் தேசிய ரீதியாகவும் இவ்விடயம் சம்பந்தமாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இதனால் இவ்விருவரும் அண்மைக் காலமாக கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது.

நான்காவது அலை கொரோனா மரணங்கள் அதிகரிப்பதன் முன்னரே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தௌபீக் அவர்களை பல தடவைகள் சந்தித்து ஜனாஸா நல்லடக்கத்திற்கான மாற்றுக் காணிக்கான அனுமதி தொடர்பில் விரிவாக கலந்துரையாடியிருந்தோம்.

ஏற்கனவே கிண்ணியா பிரதேசத்தில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகளை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தௌபீக் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அவர் ஜனாஸா நல்லடக்க மாற்றுக் காணிக்காக சகல விதமான முயற்சிகளையும் செய்து ஜனாஸா நல்லடக்கத்திற்கான காணியினையும் தயார்படுத்தி வைத்துள்ளார். ஆனால், வேறொரு இடத்திற்கு ஜனாஸா அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டுமானால், தற்பொழுது அடக்கம் செய்யப்படும் இடம் பூர்த்தியாக அடக்கம் செய்யப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.

ஆனால், மஜ்மா நகரில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்கள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் அதன் காரணமாகவே கிண்ணியாவுக்கான அனுமதி பிற்போடப்படுகின்றது எனவும் தெரிவித்திருந்தார்.

மஜ்மா நகரில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் இவ்வாறான நடைமுறைப் பிரச்சினைகள் இருக்கின்ற போது, ஜனாஸா அடக்கம் தொடர்பாக இன்னும் 12,000 ஜனாஸாக்களை அடக்க முடியும் என்றோ அடக்கம் செய்வதற்கு 10 ஏக்கர் காணியுள்ளது என்றோ கருத்துத் தெரிவிப்பதனை ஏற்க முடியாது என்றும் அக்கருத்துக்களை தான் முழுமையாக கண்டிப்பதாகவும் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக கட்சியின் தேசியத் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து அவரும் இப்பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் பேசி வருவதாகவும் அதற்காக நடவடிக்கைகளை முன்னின்று நடாத்தி தருவதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பில் விரைவான தீர்வினைப் பெறுவதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் கிண்ணியா நகர சபைத் தவிசாளரையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் இவ்விடயங்கள் தொடர்பாக காணிப் பற்றாக்குறை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிக்கையிடுவதனூடாக சிறந்த தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதோடு, இவ்விடயத்திற்கு தீர்வு காண்பதற்கு கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad