எக்குவாடோர் சிறை கலவரத்தில் 116 பேர் உயிரிழப்பு : 80 கைதிகள் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

எக்குவாடோர் சிறை கலவரத்தில் 116 பேர் உயிரிழப்பு : 80 கைதிகள் காயம்

எக்குவாடோர் சிறை கைதிகளில் இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வன்முறையினால் மேலும் 80 கைதிகள் காயமடைந்தும் உள்ளனர்.

அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சிறை வன்முறை என கருதப்படுகிறது.

குயாகுவில் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது ஐந்து கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மெக்ஸிகன் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் எக்குவாடோரியன் கும்பல், லிடோரல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். எக்குவாடோரிலேயே இதுதான் மிக ஆபத்தான சிறைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

மோதலில் ஈடுபட்ட கைதிகளில் சிலர் கையெறி குண்டுகளை வீசியதாக காவல்துறை தலைவர் ஃபாஸ்டோ புவானாகோ தெரிவித்தார்.

அங்கு நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர 400 காவல்துறையினர் தேவைப்பட்டது.

எக்குவாடோரில் தற்போது செயல்படும் சக்தி வாய்ந்த மெக்சிகன் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால் இந்த கைதிகள் எழுச்சி நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அங்குள்ள நிலைமை பயங்கரமாக இருப்பதாக எக்குவாடோர் சிறைத்துறை இயக்குநர் பொலிவார் கார்சான் தெரிவித்தார். 

"அந்த சிறையின் கட்டுப்பாடு நேற்று, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு காவல்துறை வசம் வந்தது. ஆனால் நேற்றிரவு வேறு இடத்தில் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் வெடிப்பு சத்தம் கேட்டது. இன்று காலை முழு கட்டுப்பாடும் காவல்துறை வசம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

மெக்சிகோவின் சக்தி வாய்ந்த சினாலோவா போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக கருதப்படும் லாஸ் கொனேராஸ் என்ற எக்குவாடோர் கும்பல் இந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சினோலோவா போட்டியாளர்களிடம் இருந்து எக்குவாடோர் முதல் மத்திய அமெரிக்கா வரையிலான கடத்தல் பாதையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் எக்குவாடோர் குழுக்களுடன் கூட்டணி சேர ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் என்ற மெக்சிகோ குற்றக்கும்பல் முயன்று வருகிறது. 

எக்குவாடோர் சிறைச்சாலை, காவலில் வைக்கப்பட வேண்டிய கைதிகளின் எண்ணிக்கையை விட 30 சதவீதம் கூடுதலாக உள்ளது என்று அதன் அதிபர் லாஸ்ஸோ கடந்த ஜூலை மாதம் தான் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, சிறையில் கைதிகளின் நெரிசலை தவிர்க்க குற்றச் செயல்களுக்கான தண்டனை காலத்தில் பெரும்பாலானவற்றை கழித்தவர்களை விடுவிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தப் போவதாக லாஸ்ஸோ கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த சிறை வன்முறை நடந்துள்ளது.

இதேபோன்ற மோதல்கள் இவ்வாண்டு பெப்ரவரி மற்றும் ஜூலை இல் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் நடந்தன. 

பெப்ரவரி வன்முறையில் குறைந்தது 79 பேர் இறந்தனர், ஜூலை மாத வன்முறையில் குறைந்தது 22 உயிர்கள் பலியானதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ, உவயாகில் செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment