அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்த உள்ளடக்கங்களை அரசாங்கம் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை, இதுவே பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்த உள்ளடக்கங்களை அரசாங்கம் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை, இதுவே பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

அமெரிக்காவின் முன்னாள் பிரஜையான ஜனாதிபதியும், அமெரிக்க பிரஜையான நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் ஒன்றிணைந்து யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு இரகசியமான முறையில் வழங்கியுள்ளார்கள். கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை. இதுவே பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வளங்களை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மின் கட்டமைப்பின் சுயாதீனத் தன்மையை பிற நாட்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளமை நாட்டின் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். நல்லாட்சி அரசாங்கத்தின் போது அமெரிக்காவிற்கு எதிராக போர் கொடி தூக்கியவர்கள் தற்போது மௌனித்திருப்பது அவர்களின் பலவீனத் தன்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்
.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், யுகதனவி மின் நிலையத்திற்கு அருகில் நிர்மானிக்கப்படும் சொபாதனவி மின் நிலையத்தின் 49 சதவீதம் இந்த அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக 35 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளது.

இந்த சொபாதனவி மின் நிலையத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்குவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டது. இருப்பினும் தற்போதைய பொருளாதார நிலையை கருத்திற் கொண்டு எதிர்வரும் வருடம் நிதியுதவி வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. நிதியுதவி வழங்கினாலும் அதிக கூடிய வட்டியினை ஆசிய அபிவிருத்தி வங்கி அறவிடும்.

ஐந்து வருட காலத்திற்கு தேவையான இயற்கை எரிவாயு விநியோக உரிமம் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது. இது முற்றிலும் பொய்யான கருத்தாகும்.

எரிபொருள், நிலக்கரி விநியோகிப்பதை போன்று இயற்கை திரவ எரிவாயுவை ஐந்து வருட குறுகிய காலத்திற்குள் விநியோகிக்க முடியாது. எரிவாயு விநியோகத்திற்காக துறைமுகத்தில் கட்டாயம் எரிவாயு விநியோக மத்திய நிலையம் அல்லது எரிவாயு முனையம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதற்கு பெருமளவிலான நிதி செலவாகும். 

ஆகவே செலவாகும் நிதியை ஒருபோதும் ஐந்து வருட காலத்திற்குள் திருப்பி செலுத்த முடியாது. ஆகவே ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு விநியோகத்திற்கான உரிமம் குறுகிய காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்காவின் மின் மாபிளாக்கலாக செயற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்த மின் நிலையத்தின் உரிமங்களை தம்வசம் எடுத்துக் கொண்டு கலிபோர்னியா மாநிலத்தில் தொடர்ச்சியாக மின் துண்டிப்பை செய்து, கலிபோர்னியா மாநிலத்தை கடன் நெருக்கடிக்குள் சிக்க வைத்து ஆளுநர் க்ரேட் டேவிஸை அடிபணிய வைத்து அவரை அரசியலில் இருந்து முழுமையாக நீக்க வைத்தன. அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களுக்கு தமது நாட்டின் மாநிலத்தை நெருக்கடிக்குள்ளாக்க முடியுமாயின் இலங்கை ஒரு பொருட்டல்ல.

மின் சக்தியின் சுயாதீனத் தன்மையை விட்டுக் கொடுப்பது நாட்டின் இறையாண்மையின் இறுதி என்று கருத வேண்டும். அமெரிக்காவின் முன்னாள் பிரஜையான ஜனாதிபதியாலும், இந்நாள் பிரஜையான நிதியமைச்சராலும் மின் கட்டமைப்பின் சுயாதீனத் தன்மை அமெரிக்க நிறுவனத்திற்கு அடகு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அரசியலமைப்பிற்கும் முற்றிலும் விரோதமானது.

இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் இன்றும் பகிரங்கப்படுத்தவில்லை. அரசாங்கம் தேசதுரோக செயற்பாட்டுக்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றம் இந்த ஒப்பந்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment