மக்களை திசை திருப்ப மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் - அநுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, September 30, 2021

மக்களை திசை திருப்ப மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் - அநுரகுமார திஸாநாயக்க

(எம்.மனோசித்ரா)

மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது எழுந்துள்ள எதிர்ப்புக்களையும், அதிருப்தியையும் திசை திருப்புவதற்காக மீண்டுமொருமுறை இனவாதத்தை தூண்டும் வகையிலான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு பௌத்த மகா சங்கத்தினர் உள்ளிட்ட சகல மதத் தலைவர்களும் இலங்கையில் மீண்டுமொருமுறை இரத்த வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் நியாயத்தைப் பெற்றுத் தருவதாக பேராயர் உறுதியளித்தார். ஆனால் தற்போது அந்த எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படாமையால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர் கருதுகின்றார். 

எனவே அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கு நியாயம் வேண்டி கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை பேராயருக்கு காணப்படுகிறது.

ஆனால் தற்போது மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறக்கூடும் என்றவாறான கருத்துக்களை வெளியிட்டு சில குழுக்கள் நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும்போது அரசாங்கம் தோல்வியடையும்போது அவற்றை திசை திருப்புவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதற்கு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது.

நாட்டில் மீண்டுமொரு அடிப்படைவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டும் இதுவரையில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால் பிரபல அரச தொலைக்காட்சியில் இதனுடன் தொடர்புடைய நபர்களின் நேர்காணல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இனவாதம், மதவாதத்தை முற்றாக நிராகரிக்கும் அரசியல்வாதியாக தன்மை காண்பிக்கும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராக இருக்கும் போது அரச ஊடகங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

No comments:

Post a Comment