11 வகையான அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி - இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 9, 2021

11 வகையான அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி - இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

(நா.தனுஜா)

கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் சாதனங்கள், உடைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், பழ வகைகள், ரயர் உள்ளிட்ட 11 வகையான (அதற்குள் மேலும் பல பொருட்கள் உள்ளடங்குகின்றன) அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அவற்றுக்கான முழுத் தொகையையும் பணமாக வைப்புச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் புதன்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில் மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளின் நாணயக் கடிதங்கள் மற்றும் ஏற்றுக் கொள்ளல் நியதிகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதியின்போது குறைந்தபட்சம் அதற்குரிய முழுத் தொகையையும் (100 சதவீதம்) பணமாக வைப்புச்செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாணயமாற்று வீதத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டுச் சந்தையின் திரவத்தன்மையை சாதகமான மட்டத்தில் பேணுவதற்குமென தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கிலும் அநாவசியமான இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலுமே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நிலையான தொலைபேசிகள் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களையும் மின் விசிறி, தொலைக்காட்சி, குளிரூட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் கமரா, தலைமுடி கிளிப், சூடாக்கி, விளக்குகள் மற்றும் அனல் அடுப்பு போன்ற வீட்டுப் பாவனை சாதனங்களையும் குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடை, விளையாட்டு உடைகள், இரவு உடைகள் மற்றம் பிஜாமாக்கள், மேலங்கிகள், சேர்ட் மற்றும் பிளவுஸ், முழு உடை, நீச்சல் உடை, டி-சேர்ட், பாதணி, மணிக்கூடுகள், வெயிலுக்கு அணியும் கண்ணாடி உள்ளிட்ட அணியும் ஆடை மற்றும் துணிப் பொருட்களையும் இறக்குமதி செய்யும்போது இறக்குமதியாளர்கள் அதன் முழுத் தொகையையும் பணமாக வைப்புச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேலும் தளபாடம், விளக்குகள், விளக்கு பொருத்துகள், அலங்காரப் பொருட்கள், மேசைப் பொருட்கள், சமையலறைப் பொருட்கள், கட்டில் விரிப்புக்கள் போன்ற வீட்டுத் தளபாடங்களையும் இறப்பர் ரயர்களையும் வாயுச் சீராக்கிகளையும் இறக்குமதி செய்யும்போதும் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்தோடு பழவகைகளான அப்பிள், திராட்சை, தோடம்பழம், உலர்த்திய பழங்கள் மற்றும் பழரசங்களின் இறக்குமதி, ஒப்பனைப் பொருட்கள் மற்றும் மலசலகூடப் பொருட்களின் இறக்குமதி, குடிபானங்களான பியர், வைன், கனிம குடிநீர் மற்றும் ஏனையவற்றின் இறக்குமதி, ஏனைய உணவுப் பொருட்களான தானியத் தயார்ப்படுத்தல்கள், மாவுச் சேர்க்கைகள், சொக்லேட், முளை தானியம், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணை ஆகியவற்றின் இறக்குமதியின் போதும் அதற்குரிய முழுத்தொகையும் பணமாக வைப்புச் செய்யப்பட வேண்டும்.

மேலும் ஏனைய உணவல்லா நுகர்வுப் பொருட்களான இசைச் சாதனங்கள், புகையிலைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், காகிதத் தாள்களின் இறக்குமதிகளும் மேற்படி விதிமுறைக்கு உட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment