அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையில் எமது எதிர்கால சந்ததி தங்கியுள்ளது : கலாநிதி ஜனகன்..! - News View

Breaking

Friday, August 6, 2021

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கையில் எமது எதிர்கால சந்ததி தங்கியுள்ளது : கலாநிதி ஜனகன்..!

இலங்கையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஆசிரியர்களை பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்து காலத்தை வீண்டிப்பதானது எமது எதிர்கால சந்ததியினை நிர்கதியாக்கும் செயற்பாடு என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என கலாநிதி வி ஜனகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று நாடு கொடிய கொரணாவினாலும் வெளிநாட்டு கடன் சுமைகளாலும் பொருளாதாரத்தில் அதாளபாதாளத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றது. இந்த தருணத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாரியளவு பொருளாதார நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளார்கள். இந்த வேளையில் எமது மாணவர்களின் இடைநிறுத்தப்படாத கல்வியில் மாத்திரமே எமது நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதனை யாரும் மறுக்க முடியாது. 

ஆனால் எமது நாட்டில் இந்த இலவசக் கல்வி வழங்கலில் தூண்களாக இருக்கும் அதிபர்கள் ஆசிரியர்களின் பொருளாதார நிலைமையானது காலம் காலமாக மிகவும் மந்தமாகவே காணப்படுகின்றது. இதற்கு மிகப் பெரிதளவு காரணம் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள அளவு என்பதனை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையால்தான் எதிர்கால கல்வி கற்ற சமூகத்தினை உருவாக்கும் உன்னதமான ஆசிரியர் தொழிலினை தெரிவு செய்யும் பட்டதாரிகள் அருகி வருகின்றனர். வேறு தெரிவுகள் அற்ற நிலையில் தெரிவு செய்யும் தொழிலாக ஆசிரியர் தொழில் எமது நாட்டில் மாத்திரம் உள்ளது என்பதே நியமாகும். 

இலவசக் கல்வி என மார்தட்டும் கல்விக் கொள்கையுடைய எமது நாடு, ஆசிரியர்களை பொருளாதார நெருக்கடிகளில் சிக்க வைத்து அவர்களிடம் இருந்த எவ்வாறான பங்களிப்பை எமது எதிர்கால கல்வி சமூகத்திற்காக எதிர்பார்க்கின்றது?

மற்றைய நாடுகளை ஒப்பிடும் போது எமது நாட்டில் ஆசிரியர்களின் சம்பள அளவீடானது மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது என்பதனை அரசாங்கம் புரிந்தும் சாக்கு போக்குகள் கூறியவாறு காலம் கடந்துவது ஏற்புடையதல்ல. 

ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டில் உரிய தீர்வினை வழங்குவது காலத்தின் கட்டாயம் ஆகும். 

இன்று பல பாடசாலைகளில் அந்தந்த தரத்திற்கான அதிபர்கள் வருவதற்கு விரும்புவதில்லை. அவர்களுக்கு உரிய சம்பள அளவீட்டில் உள்ள முறன்பாடே இதற்கு பிரதான காரணமாகும். இதானால் அவர்கள், அதிபர்களாக பொறுப்பெடுப்பதை விட கல்வித்திணைக்களங்களில் வேறு உத்தியோகத்தினையே விரும்பும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.

இந்த அதிபர்கள் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகத் தேவையான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த நிலையில் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிர்த்து வருகிறார்கள். இந்த மனநிலையில் இருந்தவாறு மாணவர்களுக்கு கல்வியினை போதிக்கும் போது ஆசிரியர்கள், தங்களை வருத்தி கடமையை செய்யும் நிலையிலேயே உள்ளார்கள் என்பதே உண்மை. 

இந்த நிலை நிற்சயமாக மாணவ சமுதாயத்தின் கல்விச் செயற்பாட்டில் பாரியளவு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து அரசு உடனடியான தீர்வினை வழங்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும், ஜன்னம் அறக்கட்டளையின் பிரதம அறங்காவலருமான கலாநிதி வி் ஜனகன் அவர்கள் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad