பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு போராடும் கர்தினாலின் கரங்களை பலப்படுத்த முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 19, 2021

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு போராடும் கர்தினாலின் கரங்களை பலப்படுத்த முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் - தேசிய ஐக்கிய முன்னணி

(எம்.ஆர்.எம்.வசீம்)

கத்தோலிக்க சமூகத்தின் நேசக்கரத்தை ஏற்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு, தனி ஒரு சமூகமாக நடத்தி வரும் போராட்டத்துக்கு முஸ்லிம் சமூகமும் ஆதரவு வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இதற்காக முஸ்லிம் அரசியல், சமய மற்றும் சிவில் அமைப்புக்கள் யாவும் முன்வர வேண்டும் என அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கு ஆதரவளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது, இலங்கையில் உள்ள கத்தோலிக்க மக்களின் தலைவர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அண்மையில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மீண்டும் சமூக அரங்கில் கலந்துரையாடலுக்கு உரிய ஒரு விடயமாக மாறி உள்ளன.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் சரியான திக்கில் செல்லவில்லை என்றும், தனக்கு அதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என்றும், இன்னமும் இந்த அரசாங்கம் விசாரணை என்ற போர்வையில் அப்பாவிகளை நெருக்குதலுக்கு உள்ளாக்கி சம்பந்தப்பட்ட உண்மையான நபர்களை தப்ப வைப்பதற்கான ஒரு முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளது என பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தனது எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக எதிர்வரும் 21 ஆம் திகதி தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் நாடு தழுவிய ரீதியில் வெளிக்காட்டும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சகல கத்தோலிக்க மக்களும் தமது வீடுகளில் கறுப்புக் கொடியை பறக்க விட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்நிலையில், நாங்கள் முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் இதனை நோக்குகின்ற போது எமது கருத்துக்களும் இதுவாகவே இருக்க வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும். உண்மையான சூத்திரதாரிகளும் குற்றவாளிகளும் கண்டு பிடிக்கப்பட்டால்தான் இந்த சம்பவம் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் மீது பூசப்பட்ட அழிக்க முடியாத கறையை முற்றாக நீக்க முடியும்.

இதற்காக தனித்துக் குரல் கொடுத்தால் எமது குரல்வளைகள் நசுக்கப்படும். அதனால் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் எம்மைப் போலவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் தலைவர் எடுத்துள்ளமை வரவேற்கத் தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு, உண்மையும் சத்தியமும் நிலைநாட்டப்பட வேண்டும் என அவர் தனி ஒரு சமூகமாக நடத்தி வரும் போராட்டத்துக்கு நாமும் சமூக ரீதியான ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் தேவையும் எமது கட்டாயக் கடமையும் ஆகும்.

இன்றைய முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளில் கொழும்பு மாவட்டத்தின் பிரதிநிதிகளைத் தவிர ஏனையவர்கள் வாய்மூடி, கையேந்தி மௌனம் காத்து வருகின்றனர். முஸ்லிம்களின் பிரதான கட்சி என சொல்லப்படும் கட்சியின் தலைவர் ஓரிரு சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் மிகவும் காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் கூட கட்சிக்குள் அவர் ஒரு சூழ்நிலைக் கைதியாக மாறி உள்ளதால் போதிய அரசியல் பலமின்றியே அவரது கருத்துக்கள் ஒலிக்கின்றன.

கர்தினால் மேற்கூறிய கருத்துக்களை முன்வைத்த ஓரிரு தினங்களில் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த அப்லலுல் உலமா தைக்கா சுஹைப் ஆலிம் அவர்களின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது “கத்தோலிக்கர்களாகிய நாங்கள் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு ஆதரவாக இருப்போம் அவர்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்திலும் உள்ளுரிலும் சதி வலைகள் பின்னப்பட்டுள்ளன. தயவு செய்து அவைகளில் சிக்கி விடாதீர்கள் விழிப்பாக இருங்கள் நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முன்னைய சம்பவங்களும் கருத்துக்களும் எவ்வாறு இருப்பினும் கத்தோலிக்க தரப்பில் இருந்து எம்மை நோக்கி நீட்டப்படும் நேசக்கரத்தை நாம் பற்றிப் பிடிக்க வேண்டிய தருணம் இப்போது வந்துள்ளது.

எனவே அரசியல் பேதங்களையும் ஏனைய கருத்து பேதங்களையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு சமூகம் என்ற ரீதியில் உண்மைகளை வெளிக் கொண்டு வந்து, உண்மையான சூத்திரதாரிகளையும் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி, எமது சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட பழியை நீக்க வேண்டிய தேவையும் கடமையும் எம்மீது இருக்கின்றது. அதற்காக தனித்து செயற்பட முடியாது.

அதனால் கத்தோலிக்க சமூகத்தின் நேசக்கரத்தை ஏற்று இந்த விடயத்தில் அவர்களோடு இணைந்து செயற்பட்டு, நீதிக்கும் நியாயத்துக்குமான போராட்டம் வலுவடைய உதவுவதற்கு முஸ்லிம் அரசியல், சமய மற்றும் சிவில் அமைப்புக்கள் யாவும் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment