கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் நீர் விநியோக தாங்கியில் சடலமாக மீட்பு : நீரை அருந்த வேண்டாமென பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பு - News View

Breaking

Sunday, August 29, 2021

கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் நீர் விநியோக தாங்கியில் சடலமாக மீட்பு : நீரை அருந்த வேண்டாமென பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பு

நுவரெலியா பீட்ரூ தோட்டப் பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப் பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்ஸ் லீப் நீர் வீழ்ச்சி (Lover's leap Waterfall) பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎலிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், பீட்ரூ தோட்டம் மற்றும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரதேசம் ஆகிய பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பிரதான தண்ணீர் தாங்கியில் இந்த மனித சடலம் கிடப்பது நேற்று (28) மாலை கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் ஆவாஎலிய பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கொள்ளா என்று அழைக்கப்படும் நமசிவாயம் அமிர்தலிங்கம் (42) என நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் நீர் தாங்கியின் இடுக்கில் சிக்கியுள்ள நிலையில் சடலத்தை மீட்கும் பணியை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பிரதான தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேவேளை சடலம் காணப்படும் பிரதான தாங்கியிலிருந்து மக்கள் குடிநீர் பாவணைக்காக வெளியேரும் தண்ணீரை உடனடியாக தடை செய்துள்ள பொலிசார் பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன் இக்குடிநீர் பாவனையை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுமாறு பிரதேச மக்களுக்கு விசேட அறித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வீடு உடைப்பு சம்பவம் ஒன்றில் நுவரெலியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின் நுவரெலியா நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

(கே. கிரிஷாந்தன்)

No comments:

Post a Comment