நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இனவாதத்தை முதலில் ஒழிக்க வேண்டும் : பொதுஜனபெரமுன அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Saturday, August 21, 2021

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இனவாதத்தை முதலில் ஒழிக்க வேண்டும் : பொதுஜனபெரமுன அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இனவாதத்தை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்கான மூல விசை கல்வியாகும். எனவே கல்வியூடாக நாம் அதனைச் சாதிக்க வேண்டும். 

இவ்வாறு சம்மாந்துறை வலயத்தில், புதிதாக தரமுயர்த்தப்பட்ட ஐந்து (5) தேசிய பாடசாலைகளுக்கான கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் றிஸ்லிமுஸ்தபா குறிப்பிட்டார்.

சம்மாந்துறை வலயத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம், அல்அர்சத் மகாவித்தியாலயம், அஸ்.சிறாஜ் மகா வித்தியாயலம், மல்வத்தை விபுலாநந்த மகா வித்தியாலயம் ஆகிய 5 பாடசாலைகளுக்கான தேசிய பாடசாலை தரமுயர்த்தல் கடிதங்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வு, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நேற்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.எம்.வீரசிங்கவின் இணைப்பாளர் எ.எல்.எம்.ஜெசீம் உள்ளிட்ட பலபிரமுகர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்து நெறிப்படுத்தினார். 

அங்கு அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா மேலும் பேசுகையில், கொரோனாவை முன்வைத்து பலரும் லொக்டவுண் பண்ண சொல்கிறார்கள். ஜனாதிபதி அதைச் செய்யாமல் ஏன் கொண்டு செல்கிறார்? பொருளாதாரப் பிரச்சினை காரணமாகவே லொக்டவுண் பண்ணவில்லை.

அன்று எ.சி.எஸ்.ஹமீட், எம்.எச்.மொகமட், எம்.சி. அகமட் இவர்களையெல்லாம் பாராளுமன்றம் அனுப்பியது தனியே முஸ்லிம் சமுகம் மட்டுமல்ல. சிங்கள தமிழ் சகோதரர்கள் இணைந்தே அனுப்பினார்கள்.

ஆனால் இன்று வரும் அரசியல்வாதிகள் தனது சொந்த இலாபங்களுக்காக சிறுபான்மை மக்களை இனவாதத்தை காட்டி பிரித்து வைத்துள்ளார்கள்.

கல்வியூடாகத்தான் சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பலாம். அன்று கணனி கல்வியை கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் பெற்றுக் கொடுத்தவர் என் தந்தையார் மையோண் முஸ்தபா அவர்கள்.

நாட்டிலுள்ள இனவாதத்தை எப்படி ஒழிப்பது? அது முக்கியமாக அதிபர் ஆசிரியர்கள் கைகளில்தான் தங்கியுள்ளது.

ஒருவருடைய ஆளுமை வளர்ச்சியில் மொழிகள் முக்கியம். மாணவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆங்கிலமும் தகவல்தொழினுட்ப அறிவையும் மாணவர்களுக்கு கட்டாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எனது தந்தையார் மையோண் முஸ்தபா முயற்சியெடுத்தார் என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர்)

No comments:

Post a Comment