மீண்டும் வந்த எவர் கிவன் கப்பல் : இம்முறை சிக்காமல் சென்றது எப்படி? : சூயஸ் கால்வாய் உலக பொருளாதாரத்துக்கு ஏன் முக்கியமானது? - News View

Breaking

Saturday, August 21, 2021

மீண்டும் வந்த எவர் கிவன் கப்பல் : இம்முறை சிக்காமல் சென்றது எப்படி? : சூயஸ் கால்வாய் உலக பொருளாதாரத்துக்கு ஏன் முக்கியமானது?

மார்ச் 2021 இல் சூயஸ் கால்வாயை அடைத்து உலக வர்த்தகத்திலேயே தடை ஏற்படுத்திய எவர் கிவன் கப்பல் இந்தமுறை எந்த வித சிக்கலுமின்றி கால்வாயைக் கடந்தது.

மத்தியத் தரை கடலில் இருந்து செங்கடலுக்குச் செல்லும் கப்பல்களில் எவர் கிவன் கப்பலும் ஒன்று என சூயல் கால்வாய் ஆணையம் கூறியது.

எவர் கிவன் கப்பல் தன் சரக்குகளை ஐரோப்பாவில் இறக்கிவிட்டு, ஆசியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் இக்கப்பல் கால்வாயில் தரைதட்டியபோது, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ஆறு நாட்கள் கழித்து, மீண்டும் மிதக்கத் தொடங்கியது. கப்பலை மீண்டும் இயக்கும் முயற்சியில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக சூயல் கால்வாயில் இருந்து எவர் கிவன் மீட்கப்பட்ட பிறகு, மூன்று மாத காலத்துக்கு அக்கப்பல் பறிமுதல் செய்யப்பட்டு, இஸ்மாயிலியா நகரத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் எகிப்து மற்றும் எவர் கிவன் கப்பலின் சொந்தக்காரருக்கு இடையில் நஷ்ட ஈடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடந்து முடிந்தன.

193 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சூயஸ் கால்வாய் முழுக்க இரு இழுவைப் படகுகள் மற்றும் சூயல் கால்வாய் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளோடு, எவர் கிவன் கப்பல் வழியனுப்பி வைக்கப்பட்டதாக சூயல் கால்வாய் ஆணையமே ட்விட்டரில் கூறியுள்ளது.

எவர் கிவன் கப்பல் தரைதட்டி நின்றபோது பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உலக வர்த்தகம் முடங்கியது

சூயஸ் கால்வாயில் வெள்ளிக்கிழமை வடக்கிலிருந்து தெற்காக பயணித்த 26 கப்பல்களில் எவர் கிவனும் ஒன்று. எதிர்திசையில் 36 கப்பல்கள் பயணித்தன.

உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர் கிவன், தன் 18,300 கண்டெய்னர்களை ராட்டர்டாம், ஃபீலிக்ஸ்டோவ், ஹம்பர்க் போன்ற நகரங்களில் இறக்கிவிட்டு, தற்போது சீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

கடந்த மார்ச் 23ஆம் திகதி, காற்று பலமாக வீசியதால் இந்த 400 மீட்டர் நீளமான சரக்குக் கப்பல், சூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டு உலக வர்த்தகத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது.

ஒருவழியாக பல கட்ட போராட்டத்துக்குப் பிறகு எவர் கிவன் கப்பல் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பின், எவர் கிவன் கப்பலின் உரிமையாளரான ஷோய் கிசனிடம், மீட்பு நடவடிக்கைகளுக்கான செலவுகள், சூயஸ் கால்வாயின் கரையில் ஏற்பட்ட சேதாரம் என பலவற்றுக்கும் நஷ்ட ஈடு கோரப்பட்டது.

மீண்டும் மிதக்கத் தொடங்கிய பின்னும் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுடன் `எவர் கிவன்' கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில் இருந்தது. கப்பல் நிறுவனத்திடம் இழப்பீடு வாங்குவதற்காக எகிப்து அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் என்ன மாதிரியான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது என விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் எகிப்து கோரிய 550 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
சூயஸ் கால்வாய் உலக பொருளாதாரத்துக்கு ஏன் முக்கியமானது?
உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்திய தரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது. ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் சூயஸ் கால்வாய் உள்ளது.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.

2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.

2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.

சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சூயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.

2015 ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர் வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.

No comments:

Post a Comment