ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - ஆஷுமாரசிங்க - News View

Breaking

Tuesday, August 31, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - ஆஷுமாரசிங்க

(நா.தனுஜா)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் நிலையில், இது குறித்து இலங்கை அரசாங்கமும், எதிர்க்கட்சியும் அவற்றின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷுமாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, தலிபான்கள் என்பது ஓர் தீவிரவாத அமைப்பாகும். அத்தகைய ஓர் தீவிரவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அரசாங்கம் ஏன் விரைந்து மேற்கொண்டது என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம்.

உலகளாவிய ஜனநாயகம் குறித்து சிந்திக்கும்போது, இது மிகவும் பாரதூரமான விடயமாகும். நூற்றுக்கு 99 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் ஓர் நாட்டில் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொண்டு உரியவாறு செயற்படும் முஸ்லிம்களை வீழ்த்தி விட்டு, தீவிரவாத இயக்கமொன்று ஆட்சியைக் கைப்பற்றும்போது அத்தகைய தீவிரவாத செயற்பாடுகளை எமது நாடு அங்கீகரிக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இது விடயத்தில் நாம் நிதானமாகவும் புத்திசாதூர்யமாகவும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

உலக நாடுகள் பலவும் தலிபான்களின் ஆட்சியைப் புறக்கணிப்பது குறித்துக் கலந்துரையாடி வருகின்றன. பிரான்ஸ் போன்ற சில நாடுகள் அதனைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இது குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனவே இதுபற்றி பாராளுமன்றத்தில் கலந்துரையாடி முடிவொன்றுக்கு வர வேண்டும்.

அதேபோன்று ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெளிவுபடுத்த வேண்டும்.

எமது நாடு தீவிரவாத செயற்பாடுகளின் காரணமாக கடந்த காலங்களில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறிருக்கையில் ஏனைய நாடுகளை தீவிரவாத அமைப்புக்கள் கைப்பற்றும்போது அதனை ஆதரிக்கும் நிலையில் இலங்கை இருக்கக்கூடாது என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment