தாய்மாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக்கூடாது - வைத்திய நிபுணர் தீபால் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

தாய்மாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக்கூடாது - வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

(எம்.ஆர்.எம்.வசீம்)

தாய்மாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக்கூடாது என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பில் விளக்குகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தாய்ப்பால் ஊடாக கொவிட் தொற்று குழந்தைகளுக்கு பரவுவதாக இதுவரை எந்தவொரு ஆய்வின் மூலமும் உறுதிப்படவில்லை. அதனால் தாய்க்கு கொவிட் தொற்று ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக் கூடாது.

தாய் கொவிட் தொற்றுக்குள்ளாகி, குழந்தைக்கு தொற்று இல்லாத நிலையிலும் தாய்ப்பால் ஊட்டுவதை தொடராக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார், முகக்கவசம் அணிந்து, தங்களது முகத்தை சற்று பின்னுக்கு திருப்பிக் கொண்டு, பால் ஊட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

ஏனெனில் குழந்தைக்கு தனது தாயின் முதல் பால், கட்டாயமாக கிடைக்கப் பெற வேண்டும். தாயின் முதல் பாலின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வேறு எந்த உணவின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் உரிய காலத்துக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போவதால், குழந்தைகளுக்கு பிற்காலத்தில் புற்று நோய், குழந்தைகளுக்கான தொய்வு, நீரிழிவு போன்ற பல்வேறு குறைபாடுகள் ஏற்படலாம் என்பது வைத்திய ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் நாடு பூராகவும் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கும் அதிகமான தாய்மார், குழந்தைகளுக்கு கொவிட் பரவும் என்ற அச்சத்தில் தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. அதனால் இது தொடர்பாக பால் ஊட்டும் தாய்மார் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment