சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை, மக்கள் சாதாரண நாட்களை போன்று வீதிகளில் நடமாடுகிறார்கள் : சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொண்டால் ஏனைய நாடுகளின் உதவிகளையும் இலகுவில் பெற்றுக் கொள்ளலாம் - ருவான் விஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, August 22, 2021

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை, மக்கள் சாதாரண நாட்களை போன்று வீதிகளில் நடமாடுகிறார்கள் : சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொண்டால் ஏனைய நாடுகளின் உதவிகளையும் இலகுவில் பெற்றுக் கொள்ளலாம் - ருவான் விஜயவர்தன

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. மக்கள் சாதாரண நாட்களை போன்று வீதிகளில் நடமாடுகிறார்கள். அறிவியல் முறைமைக்கு அமைய ஊரடங்கு சட்டம் செயற்படுத்தப்படவில்லை. நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் அரசாங்கம் சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை முன்னெடுத்து செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

கட்சியின் 75 ஆவது வருடம் குறித்து நிகழ்நிலை முறைமை ஊடாக கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் குறைபாடுகளை மாத்திரம் சுட்டிக்காட்டுகின்றன. மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி குறைபாடுகளை சுட்டிக்காட்டி தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான யோசனைகளையும் முன்வைத்துள்ளது.

தினசரி கொவிட் தொற்றினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 200 ஐ அண்மித்துள்ளது. மூன்று வார காலத்திற்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். காலதாமதமான நிலையில் 10 நாட்களுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வீதிக்கு சென்று பார்ததால் வழமையான நாட்களை போன்று மக்கள் வீதியில் நடமாடுகிறார்கள். சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை.

நாட்டை தொடர்ந்து முடக்க வேண்டுமாயின் நாட்டு மக்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி நாட்டு மக்களிடம் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்களினதும் விலையும், சேவைகளினதும் கட்டணமும் உயர்வடைந்துள்ளன. சம்பளம் செலுத்த முடியாத காரணத்தினால் அரச ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிடும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் கொடுப்பனவையும் இரத்து செய்யும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் யோசனையை முன்வைத்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொண்டால் ஏனைய நாடுகளின் உதவிகளையும் இலகுவில் பெற்றுக் கொள்ளலாம்.

கொவிட் தாக்கத்தின் ஊடாக செல்வந்தர்கள் இலாபமடையும் செயற்பாடுகளை முன்னெடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான 21 யோசனைகளை ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்தது. நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் முன்னெடுத்து செல்வது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment